சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர்


சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர்
x

சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் கூறினார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கோகுல் ஸ்ரீ என்ற சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்டான். சென்னையை அடுத்த தாம்பரம் கன்னட பாளையத்தில் உள்ள சிறுவன் கோகுல் ஸ்ரீயின் இல்லத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், நேரடியாக சென்று சிறுவனின் தாயாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல் ஸ்ரீ கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். சிறுவனின் தாயாரை 2 நாட்கள் அடைத்து வைத்து மிரட்டியதுடன், பிரேத பரிசோதனையையும் 2 நாட்களுக்கு மேல் தாமதப்படுத்தி வழக்கை மூடி மறைக்க திட்டமிட்டு செயல்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். குற்றவாளிகள் தப்பி விடாமல் இந்த வழக்கை முறையாக நடத்தி தண்டனை பெற்று தரவேண்டும்.

கோகுல் ஸ்ரீயின் தாயார் கணவனை இழந்து, நிரந்தர வருமானம் இல்லாமல் 5 குழந்தைகளை பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளார். கோகுல் ஸ்ரீயின் வருமானத்தை நம்பி இருந்த குடும்பம். எனவே தமிழக முதல்-அமைச்சர் இவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், வசிப்பதற்கு வீடு மற்றும் அரசு வேலையும் வழங்குவதோடு, அவரது குழந்தைகள் அரசு பள்ளியில் படிப்பதற்கான வசதிகளையும் செய்து தர வேண்டும்.

செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் பல சிறுவர்கள் அடித்து சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிகிறது. செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story