சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா?-வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கருத்து
சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா? என்பது குறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா? என்பது குறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியாக பிரிந்து 1995-ல் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.
எல்லா மாநிலங்களையும் சாலைகள் மூலம் இணைத்து அதனை மேம்படுத்திப் பராமரிப்பது ஆணையத்தின் முக்கிய பணியாகும். சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி, அத்தியாவசிய சரக்குப் போக்குவரத்தையும் ஊக்குவிக்கத் தரமான சாலைகளை அமைத்துத் தரவேண்டியப் பொறுப்புகளுடன் ஆணையம் செயல்படுகிறது.
தனியாருக்கு குத்தகை
மத்திய அரசானது நான்கு வழி அல்லது ஆறு வழிச் சாலைகளை அமைத்து அவற்றைப் பராமரிக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு சுங்கச்சாவடிகளை (டோல்கேட்) நிறுவி தனியார் நிறுவனங்களிடம் குத்தகைக்கு விட்டுவிடுகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி கடந்த 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் ஆண்டுதோறும் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போது 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது சுங்க கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும் அவை செயல்படுத்தப்படுவதில்லை. மாறாக மத்திய அரசிடம் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி கட்டண உயர்வுக்கான அனுமதியை பெறுகின்றனர் என்று கனரக வாகன ஓட்டிகள் குற்றம் சொல்கிறார்கள்.
சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கக்கட்டணம் உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதுபற்றி காண்போம்.
சாலை பராமரிப்பு இல்லை
லாரி உரிமையாளர்கள் சங்க வேலூர் மாவட்ட செயலாளர் லோகநாதன் கூறும்போது, இந்தியாவில் இருக்கும் சுங்கச்சாவடிகளால் பொருட்களை உரிய நேரத்திற்கு கொண்டு செல்ல முடிவதில்லை. சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நின்று செல்வதால் தாமதம் ஏற்படுகிறது. புதிய நடைமுறை கொண்டு வந்த போதிலும் வாகனங்கள் நின்று செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது. முறையான சாலை பராமரிப்பு இல்லை. ஆனால் சுங்கக்கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
சுங்கச்சாவடிகளில் ஓய்வறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும் சுங்கச்சாவடியில் எத்தனை வாகனங்கள் கடந்து செல்கிறது, கட்டண விவரம், சுங்கச்சாவடி காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்களுடன் வாகன ஓட்டுனர்கள் பார்க்கும் வகையில் பேனர் வைத்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் இந்த பேனர் வைக்கப்படவில்லை.
விலைவாசி உயரும்
தற்போது சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் இனி நாங்களும் வாடகையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதன் எதிரொலியாக வியாபாரிகள் தங்களது பொருட்களுக்கு விலையை உயர்த்துவார்கள். இதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் உயரும். இந்த கட்டண உயர்வு என்பது வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பாதிப்பு அல்ல. அனைத்து மக்களுக்கும் பாதிப்பு தான். இதனால் தொழில் நடத்த முடியாத நிலைக்கு பலர் தள்ளப்படுவார்கள். வேலைவாய்ப்பு இழப்பும் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் காலாவதியான சுங்கச்சாவடிகளையும் மூட வேண்டும் என்றார்.
கட்டணத்தை குறைக்க வேண்டும்
போளூரை சேர்ந்த வியாபாரி கோபிநாத் கூறுகையில், சுங்கச்சாவடிகள் மத்திய அரசின் நேரடி பார்வையில் தனியாரிடம் குத்தகை விடப்படுகிறது. அதனால் தனியார்துறை முதலாளிகள் அதிகம் கட்டணம் வசூல் செய்கிறார்கள்.. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும். அதேபோல் மத்திய அரசே நேரடியாக இதை நடத்த வேண்டும்.
மேலும் வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்குள்ளவே 80 கிலோமீட்டருக்கு 2 டோல்கேட் உள்ளன. இதனை 160 கிலோமீட்டருக்கு ஒரு டோல்கேட் என்று மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் என்றார்.
பொதுமக்களுக்கு பாதிப்பு
திருப்பத்தூர் மளிகை வியாபாரி லோகநாதன் கூறும்போது, டோல்கேட் கட்டணம் ஏற்கனவே ஓரளவுக்கு உயர்த்துள்ளது. இதற்கு மேல் கட்டணம் உயர்த்தும் பட்சத்தில் பொதுமக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். கட்டணம் உயர்வால் லாரி வாடகை கட்டணம் உயர்த்தப்படுகிறது. லாரி வாடகை உயர்வால் மளிகை, காய்கறிகள், கட்டுமான பொருட்கள் மற்றும் அனைத்து வகையான பொருட்கள் மீதும் விலை உயர்த்தப்படுகின்றன. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஏற்கனவே கொரோனாவில் இருந்து மீண்டு மக்கள் வரவில்லை. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அதிகமாக சுங்கச்சவாடிகள் உள்ளது. ஆகையால் தேவையில்லாத இடங்களில் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். ஆண்டுதோறும் சுங்க கட்டணம் உயர்த்துவதால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அனைவரின் நலனை கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றார்.
நஷ்டம் ஏற்படும்
ராணிப்பேட்டை தனியார் பார்சல் சர்வீசை சேர்ந்த எஸ்.கே.டி.சாந்தகுமார் கூறுகையில், கொரோனா காலம் தொடங்கியது முதல் பார்சல் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு இன்னமும் மீள முடியாத சூழ்நிலையில் உள்ளோம். இந்த நிலையில் சுங்க கட்டணம் உயர்த்தியுள்ளது மேலும் இத்தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. போட்டி நிறைந்த இத்தொழிலில் நாங்கள் டன் கணக்கில் தான் பார்சலுக்கு விலை நிர்ணயம் செய்து வசூலிக்கிறோம். சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டால் நாங்கள் ஏற்கனவே வசூலிக்கும் கட்டணத்தை ஏற்ற முடியாது. இதனால் எங்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும். அதனால் சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்து பார்சல் தொழிலையும் லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலையும் காப்பாற்ற வேண்டும் என்றார்.
விலை உயர்வு
அரக்கோணம் டிராவல்ஸ் அதிபர் யுவராஜ் கூறுகையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில்துறை மற்றும் டிராவல்ஸ் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துள்ளது. வாகனங்களுக்கான இன்சுரன்ஸ் தொகையும் உயர்ந்துள்ளது. இதுபோன்ற செலவினங்களை சமாளிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. ஏற்கனவே வாடகை கிடைக்காமல் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், பாஸ்ட்டேக் முறை அமல்படுத்தப்பட்ட பிறகு வருவாய் ஓரளவுக்கு அதிகரித்து இருக்கும். எனவே சுங்கக் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்தும் முடிவை பரிசீலித்து கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்றார்.
bபள்ளிகொண்டா சுங்கச்சாவடி மேலாளர் செந்தில்குமார் கூறுகையில், வேலூர் அருகே பள்ளிகொண்டாவில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடி வழியாக நாள்தோறும் சராசரியாக 19 ஆயிரமும், விழா காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் 24 ஆயிரமாகவும் கார்கள், பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. இவற்றில் 96 சதவீத வாகனங்கள் பாஸ்ட்டேக் மூலம் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தி செல்கின்றனர். அரசு மற்றும் மக்கள் பிரதிநிதிகள், ஆம்புலன்ஸ் மற்றும் நீதித்துறை வாகனங்கள் சுங்கக் கட்டணம் விலக்கு பெற்ற வாகனங்கள் 3 சதவீதமாகும். இன்னும் 1 சதவீத வாகனங்கள் பாஸ்ட்டேக் மூலம் கட்டணம் செலுத்தாமல் கூடுதல் அபராதத்தை கட்டணமாக செலுத்துகின்றனர். இதற்கு காரணம், அவர்களிடம் வாகனங்களில் முறையான ஆர்.சி.புத்தகம் மற்றும் டாக்குமெண்டுகள் இருப்பதில்லை. மேலும் தற்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மிக குறைவாகத்தான் உயர்த்தப்பட்டு உள்ளது. 96 சதவீத மக்கள் பாஸ்ட்டேக் மூலம் கட்டணம் செலுத்துவதால் கட்டண உயர்வை கண்டுகொள்ளவில்லை. 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளிகொண்டா சுங்கச்சாவடி 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இன்னும் 18 ஆண்டுகள் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி செயல்பாட்டில் இருக்கும் என்றார்.