பெண்களுக்கு சொத்துரிமை திமுக ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது - புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் பேச்சு


பெண்களுக்கு சொத்துரிமை திமுக ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது - புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் பேச்சு
x

ஒரு லட்சம் மாணவிகள் பயன்பெறும் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

சென்னை,

பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாகிட 5-9-2022 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கும் "புதுமைப்பெண்" திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு உயர்கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.

புதுமைப்பெண் திட்டத்தின் முதல்கட்டத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் இடைநிற்றலில் இருந்து 12 ஆயிரம் மாணவிகள் மீண்டும் உயர்கல்வியில் சேர்ந்து பயனடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்து கல்லூரியில் நடைபெற்ற விழாவில், மேலும் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 347 மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தின் 2-ம் கட்டத்தினை தொடங்கிவைத்தார்.

இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "உயர் கல்வியில் மாணவிகள் சேர்க்கை 27 சதவீதமாக உயர்ந்துள்ளது. காவல்துறையில் நேற்று பணி நியமனம் பெற்ற 17 பேரில் 13 பேர் பெண் டி.எஸ்.பி.க்கள். கல்வியை அனைவருக்கு சமமானதாக ஆக்க முயற்சி செய்து வருகிறோம்.

பெண்களுக்கு கல்வி மிக, மிக முக்கியம். கல்வியை முடிக்கும் மாணவிகள், கண்டிப்பாக உயர்கல்வியை தொடரவே இந்தத் திட்டம். அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்கு உருவானதுதான் திராவிட இயக்கம். நாடு செழித்து தன்னிறைவுடன் இருக்க கல்வி மிகவும் அவசியம். பெண்களுக்கு சொத்துரிமை முதன்முதலாக திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களின் உரிமைக்காக போராடியவர் என்பதால் புதுமைப்பெண் திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

முன்னதாக புதுமைப்பெண் திட்டத்தின் 2-ம் கட்ட தொடக்க விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மைச் செயலாளர், சமூக நலத்துறை இயக்குனர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story