'தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளித்தது காங்கிரஸ் கட்சியே' - கே.எஸ்.அழகிரி பேட்டி


தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளித்தது காங்கிரஸ் கட்சியே - கே.எஸ்.அழகிரி பேட்டி
x

அரசியல் செய்வதற்காக ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. ‘தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளித்தது காங்கிரஸ் கட்சி தான் என கே.எஸ்.அழகிரி கூறினார்.

சென்னை

ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் அடையாளமாக தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சி தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை கொடுங்கையூர், கொளத்தூர், பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, ஓட்டேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் டில்லிபாபு தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் கொடியேற்றி காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் இடையே உரையாற்றினார்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி. செய்தி தொடர்பாளர் கோபண்ணா. வடசென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் இமயா கக்கன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கே.எஸ். அழகிரி நிருபர்களிடம் பேசும்போது, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் இருந்து எந்த தமிழ் அறிஞரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரியவில்லை. பா.ஜ.க.வினர் அரசியல் செய்வதற்காக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை கையில் எடுத்துள்ளார்கள். அவர்களது செயல் திட்டத்தில் இது ஒரு மறைமுகமான செயல் திட்டம் ஆகும். மு.கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தான் தான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது.

எனவே காங்கிரஸ் கட்சியை விட மாநில மொழிகளுக்கு பா.ஜ.க. எதுவும் பெரியதாக செய்துவிடவில்லை. மொழி வாரியாக மாநிலங்களை உருவாக்கியதும் காங்கிரஸ்தான். இவர்கள் (பா.ஜ.க.வினர்) ஒற்றை மொழி, ஒற்றை கலாசாரம், ஒற்றை ஆட்சி என்ற கலாசாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். குஜராத் தேர்தலில் நல்ல வெற்றி வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. ராகுல் காந்தியின் நடைபயணம் அரசியலுக்காக நடத்தப்படுவது அல்ல, காந்தி செய்ததைப் போல இந்திய மக்களை ஒற்றுமைப்படுத்த சென்று கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.


Next Story