ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை: விஜயபாஸ்கர் குறித்த பத்திகளுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு


ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை: விஜயபாஸ்கர் குறித்த பத்திகளுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு
x

ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கையி விஜயபாஸ்கர் குறித்த பத்திகளுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

மதுரை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் தங்களது அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அந்த ஆணையத்தின் அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம் பெற்றிருந்தது.

இதற்கிடையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையில் எனது பெயர் சேர்க்கப்பட்டதற்கும் குற்றம் சாட்டப்பட்டதற்கும் தடை விதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக முறையீடு செய்யப்பட்டது. அதன் பேரில் நேற்று அந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

முடிவில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கும், அதனை பயன்படுத்தவும் இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விஜயபாஸ்கர் குறித்த பத்திகளுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க வலியுறுத்தி அரசு தரப்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை (இன்று) விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த பத்திகளுக்கு விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்தார்.

அத்வானி, சுப்ரீம் கோர்ட்டின் பல்வேறு வழக்குகளை நீதிபதி சுவாமிநாதன் சுட்டிக்காட்டி தடையை நீக்க மறுப்பு தெரிவித்தார். விசாரணைக்காக அழைத்து மனுதாரர் மீது குற்றம்சாட்டுவது எப்படி? என நீதிபதி கேள்வி எழுப்பினார். நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அடிப்படையில் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் குற்றச்சாட்டு அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் நீதிபதி கூறியுள்ளார்.


Next Story