முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு


முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு
x

முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் 4 பவுன் நகையை பறித்த டிப்-டாப் ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் சோலைஹால் பகுதியை சேர்ந்த பழனிசாமி மனைவி பிச்சையம்மாள் (வயது 65). இவர் திண்டுக்கல் காந்தி மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய காய்கறி கடைக்கு டிப்-டாப் உடையணிந்த நபர் வந்தார். பின்னர் அவர், பிச்சையம்மாளிடம் நைசாக பேச்சு கொடுத்தார். அப்போது காய்கறி வியாபாரத்தில் போதிய வருமானம் இல்லை என்று பிச்சையம்மாள் புலம்பியபடி தெரிவித்தார்.

அப்போது அந்த நபர், தனக்கு தெரிந்த அரசு அதிகாரிகள் இருப்பதாகவும், அவர்களிடம் கூறி முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாகவும் பிச்சையம்மாளிடம் கூறினார். இதனால் குடும்ப செலவுக்கு போதிய வருமானம் இல்லாமல் தவித்த பிச்சையம்மாள், முதியோர் உதவித்தொகை பெற்று தரும்படி அந்த நபரிடம் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து தன்னோடு வந்தால் அரசு அதிகாரியை சந்தித்து உடனே விண்ணப்பித்து உதவித்தொகை வாங்கி தருவதற்கு ஏற்பாடு செய்ததாக அந்த நபர் கூறினார்.

இதனை உண்மையென நம்பிய பிச்சையம்மாள் அந்த நபருடன் சென்றார். இருவரும் திண்டுக்கல்-மதுரை சாலையில் கலிக்கம்பட்டி பிரிவு அருகே சென்றனர். அப்போது அந்த நபர் நகைகள் அணிந்து இருந்தால் உதவித்தொகை தர மாட்டார்கள் என்று கூறி, பிச்சையம்மாள் அணிந்திருந்த நகைகளை கழற்றி தரும்படி கேட்டுள்ளார். உடனே பிச்சையம்மாளும் மறுப்பேதும் கூறாமல் 4 பவுன் கம்மல் மற்றும் மோதிரத்தை கழட்டி அவரிடம் கொடுத்துள்ளார். பின்னர் சிறிது தூரம் சென்றதும் பிச்சையம்மாளை ஒரு இடத்தில் நிற்கும்படி சொல்லிவிட்டு அதிகாரியை சந்தித்து விட்டு வருவதாக கூறி அந்த நபர் சென்றார்.

அதன் பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அதன் பின்னரே பிச்சையம்மாள் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் பிச்சையம்மாள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த டிப்-டாப் ஆசாமி வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story