காளான் வளர்ப்பு குடில் அமைத்து கூடுதல் வருவாய் ஈட்ட பெண் விவசாயிகளுக்கு மானியம்
உடுமலை வட்டாரத்தில் காளான் வளர்ப்பு குடில் அமைப்பதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு பெண் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
காளான் வளர்ப்பு
சமீப காலமாக பொதுமக்களிடையேசத்துக்கள் நிறைந்த காளானுக்கு நல்லவரவேற்பு உள்ளது. மட்டன், சிக்கன் போன்றவற்றை சாப்பிடாத சைவப்பிரியர்களின் விருப்பத் தேர்வாக காளான் உள்ளது. இதனால் காளானுக்கான தேவை அதிகரித்து விற்பனை சந்தையில் நல்ல வரவேற்பு உள்ள பொருளாக மாறியுள்ளது.
மேலும் காளான் வளர்ப்பு என்பது சிறந்த வருவாய் ஈட்டக்கூடிய தொழிலாகவும் உள்ளது. சிறிய முதலீட்டில் குறைந்த அளவு இடத்தில் காளான் வளர்ப்பு மேற்கொள்ள முடியும்.
இந்தநிலையில் பெண் விவசாயிகளுக்காக காளான் வளர்ப்புக் குடில் அமைக்க தோட்டக்கலைத்துறை மூலம் மானியம் வழங்கப்படுவதாக உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன ரம்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மானியம்
உடுமலை வட்டாரத்தில் 2022-23 ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட குறிஞ்சேரி, சின்னவீரன்பட்டி, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர், ஆலாம்பாளையம், குருவப்ப நாயக்கனூர், சின்னகுமாரபாளையம், ஜிலோபநாயக்கன்பாளையம், தின்னப்பட்டி, மொடக்குப்பட்டி, தீபாலப்பட்டி, வடபூதனம் ஆகிய 12 கிராமங்களில் உள்ள பெண் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் 600 சதுர அடியில் காளான் வளர்ப்புக் குடில் அமைக்க 50 சதவீத மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.
மேலும் அவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் மற்றும் பொங்கலூர் வேளாண்மை ஆராய்ச்சி மையம் மூலம் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. காளானுக்கான தேவை அதிகம் இருப்பதால் சந்தை வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. எனவே காளான் உற்பத்தி செய்வதன் மூலம் பெண் விவசாயிகள் புதிய தொழில் முனைவோராக உருவாகலாம்.
இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet//index.php என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது உடுமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.'
இவ்வாறு அவர் கூறினார்.