கள்ளக்குறிச்சி கலவரம்: வன்முறையைத் தூண்டும் வாட்ஸ்அப் பதிவு - மேலும் 3 பேர் கைது...!


கள்ளக்குறிச்சி கலவரம்: வன்முறையைத் தூண்டும் வாட்ஸ்அப் பதிவு - மேலும் 3 பேர் கைது...!
x

கனியாமூர் தனியார் பள்ளி வன்முறையில் வாட்ஸ் அப் குழு மூலம் வன்முறையைத் தூண்டியதாக 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கடந்து சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதன் காரணமாக பள்ளி வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில், அங்குள்ள பொருட்களும் சேதப்படுத்தப்பட்டு சூறையாடப்பட்டன.

கள்ளக்குறிச்சி போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல இந்த விவகாரத்தில் தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர் ,செயலாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வன்முறையில் ஈடுபட்ட அனைத்து கலவரக்காரர்களையும் கைது செய்வதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக போலி தகவல்களை பரப்பியதாக தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு முன்பாக வாட்ஸ்அப் குழு உருவாக்கி 400 பேரை உறுப்பினராக சேர்ந்து வன்மத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏர்வாய்பட்டினம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 355-ஆக உயர்ந்துள்ளது.


Next Story