கனியாமூர் கலவரத்தின்போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை திரும்ப ஒப்படையுங்கள் தண்டோரா போட்டு கிராம மக்களிடம் அறிவுறுத்தல்

கனியாமூர் கலவரத்தின்போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை திரும்ப வந்து ஒப்படையுங்கள் என்று தண்டோரா போட்டு கிராம மக்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த 17-ந்தேி, மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதிக்கேட்டு பல்வேறு அமைப்பினர் போராட்டத்தை முன்னெடுத்தனர். இறுதியாக இது கலவரத்தில் முடிந்தது.
இந்த கலவரத்தின் போது, பள்ளிக்குள் புகுந்தவர்கள் அங்கிருந்த மேஜை, இருக்கைகள், ஏசி எந்திரங்கள், மின் விசிறிகள், ஏர் கூலர், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தூக்கிச் சென்றனர். மேலும், பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றைதயும் ஓட்டி சென்றனர்.
போலீஸ் நடவடிக்கை
இந்த நிலையில் கலவரத்தின் போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்கள் அனைத்தையும் திரும்ப பெறும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், சின்னசேலம் தாசில்தார் அனந்தசயனன் உத்தரவின் பேரில் கனியாமூர் கிராமத்தில் நேற்று தண்டோரா போடப்பட்டது.
அப்போது, கடந்த 17-ந்தேதி சக்தி மெட்ரிக் பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பள்ளிக்கு சொந்தமான பொருட்களை திரும்ப கொண்டு வந்து ஒப்படைத்து விட வேண்டும்.
இல்லையெனில் அந்த பொருட்களை வைத்திருப்பவர்களும் கலவரம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.






