வரதட்சணை கொடுமை.. பிரிவு.. மோதல்: மனைவியை காரில் தரதரவென இழுத்துச் சென்ற கணவன்

கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவரை விட்டு பிரிந்து சென்ற மனைவி, தன் குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
வரதட்சணை கொடுமை.. பிரிவு.. மோதல்: மனைவியை காரில் தரதரவென இழுத்துச் சென்ற கணவன்
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள முதலார் பகுதியை சேர்ந்த ஓவியரும், அணைக்கரையைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண்ணும் கடந்த 2021ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் ஓவியர் தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம், நகை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவரை விட்டு பிரிந்து சென்ற மனைவி, தன் குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அவர் ஆற்றூர் பகுதியில் உள்ள ஒரு கல்வியியல் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கம்.

நேற்று முன்தினம் மாலையில் கல்லூரியில் இருந்து அந்த இளம்பெண் வீடு திரும்பியபோது, அவரது வீட்டின் அருகில் தயாராக நின்றிருந்த கணவன் வழிமறித்து தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் மனைவியின் ஸ்கூட்டர் சாவியை பிடுங்கிக்கொண்டு தனது காரில் ஏறினார். தடுக்க முயன்ற மனைவியை தாக்கிவிட்டு காரில் புறப்பட தயாரானார்.

பின்னர் காரின் ஜன்னல் வழியாக தனது ஸ்கூட்டர் சாவியை வாங்க முயன்றார் மனைவி. அப்போது கணவர் காரை இயக்கி மனைவியை தரதரவென இழுத்துச்சென்றார். இதனால் அந்த பெண் அலறினார். இதைப் பார்த்து அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் சில இளைஞர்கள் காரைத் துரத்தி சென்றனர். உடனே மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு வேகமாக தப்பிச் சென்றார். கீழே விழுந்ததில் அந்த பெண்  காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மனைவியை காரில் தரதரவென இழுத்து சென்ற பதைபதைக்க வைக்கும் காட்சி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com