மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் புது நாடகத்தை அரங்கேற்றியுள்ளது - எடப்பாடி பழனிசாமி


மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் புது நாடகத்தை அரங்கேற்றியுள்ளது - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 5 July 2023 5:06 AM GMT (Updated: 5 July 2023 6:10 AM GMT)

மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கான இலச்சினையை வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று காலை 9 மணிக்கு அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து தலைமைக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு மற்றும் மதுரை மாநாடு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. புதிய உறுப்பினர் சேர்க்கை, கட்சியின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில், மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடக்கும் அதிமுக மாநில மாநாட்டிற்கான இலச்சினை வெளியிட்டப்பட்டது. அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இலச்சினையை வெளியிட்டார். வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு எனும் இலச்சினையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இந்தநிலையில், அதிமுகவில் இனி வெற்றிடம் என அதிமுக மாநில மாநாடு இலச்சினை வெளியிட்ட பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுக தான். ஒன்றரை மாதத்தில் அதிமுகவில் 1.60 கோடி உறுப்பினர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அதிமுகவை உடைக்கவும், முடக்கவும் சிலர் கண்ட கனவு தான் தற்போது உடைந்து விட்டது.

அதிமுக பல்வேறு பிரிவுகளாக உடைந்து விட்டது என பலரும் விமர்சனம் செய்தனர். அதிமுக உடையவும் இல்லை, சிந்தவும் இல்லை, சிதறவும் இல்லை. கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை உறுப்பினர் சேர்க்கை மூலம் நிரூபித்துக் காட்டி உள்ளோம். அதிமுகவில் இனி வெற்றிடமே இல்லை என நிரூபித்துள்ளோம். ஆகஸ்ட்டில் நடக்கும் அதிமுக மாநில மாநாடு நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அடிதளமாக அமையும்.

மேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறது. மேகதாது விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை இருமாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசின் செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம். அமைதியாக உள்ள மாநிலத்தை சீர் குலைக்கும் நோக்கில் டி.கே.சிவக்குமார் செயல்படுகிறார்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் சிறப்பான முறையில் செயல்பட்டது. அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம்.

கடலூரில் காய்ச்சல் சிகிச்சைக்கு வந்தவருக்கு நாய்க்கடிக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையை கூட சரியாக பராமரிக்கவில்லை.

அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறை சிறப்பாக இருந்தது. திமுக ஆட்சியில் நிர்வாக திறமையே இல்லை. இனியாவது திமுக அரசு தூக்கத்தில் இருந்து திமுக அரசு விழிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story