மேகதாதுவில் கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது
மேகதாதுவில் கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது என காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
காட்பாடி கழிஞ்சூர் ஏரியை ரூ.29 கோடி செலவில் சுற்றுலா மையமாக மாற்றி அதில் படகு சவாரி விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தாராபடவேடு ஏரி, காட்பாடியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயன்பாட்டுக்கு வராமல் உள்ள நீச்சல் குளம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நீச்சல் குளத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மாவட்ட விளையாட்டு மையத்தில் உள்ள குறைபாடுகளை அறிக்கையாக தனக்கு வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அன்பு, விமலா சீனிவாசன், டீட்டா சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அணை கட்ட முடியாது
மேகதாது அணை கட்டுவோம் என கர்நாடக அரசு கூறுவது அவர்களின் அரசியலுக்காகத்தான். அவர்களால் மேகதாது அணையை கட்ட முடியாது. காரணம் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். சுற்றுச்சூழல்துறை, வனத்துறை, காவிரி நதி நீர் ஆணையம், எல்லாவற்றையும் விட தமிழக அரசிடம் ஒப்புதல் பெறவேண்டும். அவ்வளவு சீக்கிரம் அணை கட்ட முடியாது.
நாங்களும் அணையை கட்ட விடமாட்டோம். ஒப்புதலும் தரமாட்டோம். நீதிமன்றம் செல்வோம்.
தமிழக அரசு அனுமதிக்காது
ஒரு போதும் கர்நாடக அரசு மேகதாது அணைகட்ட தமிழக அரசு அனுமதிக்காது. நாங்கள் ஒப்புக்கொள்ளவேமாட்டோம். தமிழகத்தில் ஆறுகளில் சிறிய தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பாலாற்றில் வெட்டுவாணம், சேண்பாக்கம், திருப்பாற்கடல், பசுமாத்தூர் உள்பட பல இடங்களில் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி வருகிறோம்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் கனிம வளங்களில் அரசுக்கு ரூ.1,700 கோடி இழப்பு ஏற்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்து ரூ.1,700 கோடி நஷ்டத்தை பூர்த்தி செய்து பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக கனிம வளத்தை வெட்டி எடுத்தவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதித்து சரி செய்துள்ளோம். எங்கள் ஆட்சியில் எந்தவித கனிமவள முறைகேடுகளும் நடக்கவில்லை.
மகளிர் உரிமைத்தொகை
மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவதில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது உண்மையல்ல. யாருக்கு வழங்க வேண்டும் என எழுதிகொடுத்தால் வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.