அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கருணாநிதியின் சமூக நீதி வரலாறு, பாடத்திட்டமாக இணைக்கப்படும் -அமைச்சர் தகவல்


அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கருணாநிதியின் சமூக நீதி வரலாறு, பாடத்திட்டமாக இணைக்கப்படும் -அமைச்சர் தகவல்
x

அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கருணாநிதியின் சமூக நீதி வரலாறு, பாடத்திட்டமாக இணைக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, 'சமூக நீதி காவலர் கலைஞர்' என்ற தலைப்பில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி வருமாறு:-

என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு படிக்கும்போதே தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே முதல்-அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து கோவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு 'வால்மார்ட்' நிறுவனம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், உயர் கல்வித்துறை என முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

இம்மாதம் 21-ந் தேதியில் இருந்து இந்த பயிற்சி தொடங்கப்பட உள்ளது. மற்ற கல்லூரிகளுக்கும் இவை போன்ற தொழிற்பயிற்சி விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்பை பெறும் திறன் அதிகரிக்கும்.

கலந்தாய்வு குறைப்பு

தற்போது தகவல் தொழில்நுட்ப துறையிலும், கணிப்பொறி துறையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. என்ஜினீயரிங் கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட்டு கல்லூரிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 4 கட்டங்களாக நடைபெறும் கலந்தாய்வு எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

என்ஜினீயரிங் கல்வியில் சேர்ந்துவிட்டு, பின்னர் மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்களின் காலியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பேராசிரியர் பற்றாக்குறை இல்லை

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பற்றாக்குறை இருப்பதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார். அதுபோன்ற நிலை இல்லை. ஒன்றிரண்டு இடங்களில் இருக்கும் பற்றாக்குறையை நிரப்பும் பணிகளை அந்தந்த பல்கலைக்கழகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

மாநில கல்வி கொள்கையை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும்.

கருணாநிதியின் சமூகநீதி

சமூக நீதிக்காக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆற்றிய தொண்டுகள் பற்றி சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் சமூக நீதி குழுவை, 'சமூக நீதி காவலர் கலைஞர்' என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் உருவாக்கியிருக்கிறார்.

கருணாநிதியை பொறுத்தவரை, சட்ட ரீதியாக இருந்தாலும், சமூக ரீதியாக இருந்தாலும் சமூக நீதிக்காக போராடியது சாதாரணம் ஆனதல்ல. அவரை பற்றி எல்லா மாணவர்களிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும் என்று பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அனைத்து கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் கலைஞரின் சமூக நீதி வரலாறு, பாடத்திட்டமாக இணைக்கப்படும். மேலும், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையிடம் ஆலோசிக்கப்படும். அதற்கான பாடப்புத்தகங்களும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போட்டிகள்

கல்லூரிகள், பள்ளிகளில் இது சம்பந்தப்பட்ட கட்டுரைப் போட்டி, கவிதை போட்டிகளை எடுத்துச்செல்ல வேண்டும் என்றும், அனைத்து கல்லூரிகளிலும் ஆங்கிலத்திலும், தமிழிலும் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சமூக நீதி தத்துவத்தை பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். பெண்ணுரிமை, மாற்றுத்திறனாளிகளுடைய உரிமை அனைத்தையும் இணைத்து இளைஞர்களுக்கு அதை தெரிவிக்க வேண்டும். அவர்கள் இந்த வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அனைவரும் ஒரு முடிவை எடுத்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் பொன்முடி தலைமையில் அமைக்கப்பட் டுள்ள சமூகநீதி காவலர் கலைஞர் குழுவில் இடம் பெற்றுள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story