அவதிப்படும் பெற்றோர்கள்: ஆடம்பர விழாக்களாக மாறிவரும் திருமணங்கள்- காலத்தின் கட்டாயமா? கருத்து சொல்கிறார்கள்


அவதிப்படும் பெற்றோர்கள்: ஆடம்பர விழாக்களாக மாறிவரும் திருமணங்கள்- காலத்தின் கட்டாயமா? கருத்து சொல்கிறார்கள்

ஈரோடு

மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் விதமாகவும், உறவுகளைப் புதுப்பிக்கும் நிகழ்வாகவுமே திருமணங்கள் இத்தனை காலமும் நடந்து வந்தன.

அளவான விருந்தினர்கள், அசத்தலான ஏற்பாடுகள், நடுவீட்டில் பந்தி வைத்து, ஓடி ஓடி உபசரிக்கும் உறவுகள் என கல்யாணங்களில் சந்தோஷம் பொங்கி வழிந்த நாட்கள் உண்டு.

மண்டபமே தீர்மானிக்கிறது

கிராமங்களில் வீடுகளிலேயே திருமணத்தை நடத்தி முடித்து விடுவார்கள். அந்தளவுக்கு கிராமங்களிலும் சரி, அவர்களது மனங்களிலும் சரி இடவசதி இருக்கும். ஆனால் நகரங்களில் அப்படி அல்ல.

திருமணங்களை மண்டபங்களில் நடத்தவேண்டிய சூழல்தான் இருக்கிறது. முகூர்த்த நாட்களில் திருமண மண்டபங்கள் கிடைப்பதே அரிதாகிவிடும். சில நேரங்களில் மண்டபங்கள் காலியாக உள்ள நாட்களில் திருமணத்தை வைத்துக்கொண்டால் என்ன? என்று யோசிப்போரும் உண்டு.

முகூர்த்தத் தேதியைக்கூட இங்கே மண்டபங்களே தீர்மானிக்கின்றன.

திருமண 'பேக்கேஜ்'

முன்பெல்லாம் ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து உறவினர்கள் உதவியோடு செய்த நிலைமாறி, இப்போது 'பேக்கேஜ்' என்ற அடிப்படையில் திருமண நிகழ்வுகளை நடத்தும் கட்டாயத்திற்கு வந்து இருக்கிறோம்.

அதை நடத்திக்கொடுக்கவும் ஏஜென்சிகள் முளைத்து இருக்கின்றன. 'கையில காசு... வாயில தோசை..' கதைதான்.

ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து அழைத்தது, அழைப்பிதழ் கொடுத்தது எல்லாம் மாறி, 'வாட்ஸ்-அப்'பில் அழைப்பிதழ் அனுப்புவது, 'ஜிபே', 'போன்பே' வழியாக மொய் எழுதுவது போன்ற எந்திரத்தனமான கலாசாரத்தை நாம் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டோம்.

விழிபிதுங்கும் பெற்றோர்

திருமணங்களை பலர் தங்களது செல்வாக்கைப் பறைசாற்றும் ஆடம்பரத் திருவிழாக்களாகவே இப்போது நடத்தி வருகின்றனர்.

திருமண மண்டபத்தை 'புக்' செய்வது முதல், வரவேற்பு, டெக்கரேஷன், மேக்கப், ஆடல்-பாடல், போட்டோ- வீடியோ, சாப்பாடு என ஒவ்வொன்றிலும் ஆடம்பரம் புகுந்துவிட்டது.

ஆனால் நடுத்தர மக்களுக்கு திருமணம் ஒரு மிகப்பெரிய வேள்வியாகவே இருக்கிறது.

காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, திருமண செலவுகளால் பெற்றோர் விழிபிதுங்கி போகிறார்கள்.

அப்படி திருமண நிகழ்வுகளில் ஆடம்பரம் தலைதூக்க என்ன காரணம்? என்னென்ன செலவுகள் அதிகரித்திருக்கிறது? என்று சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:-

எம்.அம்ஜத்கான்

இதுபற்றி ஈரோட்டை சேர்ந்த எம்.அம்ஜத்கான் கூறியதாவது:-

திருமணம் என்று கூறினாலே, திருமணம் நடத்த இருக்கும் பெற்றோரின் முன் வந்து நிற்பது தங்க நகைகள் குறித்த பயம்தான். இன்று தங்கம் விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. தங்கம் வாங்குவது என்பது எழைகளுக்கு கனவாகிப்போய் வருகிறது. ஆனால், தங்கம் இல்லாமல் திருமணம் இல்லை என்கிற நிலையால் அதை சம்பாதிக்க பெற்றோர்கள் கடுமையாக பாடுபட்டு வருகிறார்கள்.

திருமணத்துக்கு தேவையான தங்கத்தை சேமித்து வைத்திருந்தால் கூட, அன்றாடம் திருமண மண்டபங்களின் வாடகை உயர்ந்து வருவது இன்னொரு பாதிப்பாக இருக்கிறது. ஈரோட்டில் 1½ லட்சம் ரூபாய்க்கு குறைவாக வசதியான திருமண மகால்கள் இல்லை என்கிறபோது 2 நாட்கள் நிகழ்ச்சி நடத்துபவர்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும். மண்டப அலங்காரம், உறவினர்கள் வரவேற்பு என்று செலவுகள் எகிறிக்கொண்டே இருக்கிறது.

எங்கள் முஸ்லிம்களின் வீடுகளில் அசைவ விருந்து வைக்கிறபோது ஒரு சாப்பாட்டுக்கு குறைந்த பட்சம் ரூ.500 ஆகிறது. 1000 பேருக்கு உணவு போடுவது என்றால் எத்தனை லட்சம் செலவாகும் என்று பாருங்கள். மணப்பெண் சேலை, மணமகன் உடை இன்னும் தினசரி அறிமுகமாகும் ஆடம்பரங்கள் ஒவ்வொன்றும் பெற்றோரை விழிபிதுங்க வைப்பதாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பி.எஸ்.பிரபாகர்

சம்பத்நகரை சேர்ந்த பி.எஸ்.பிரபாகர் கூறியதாவது:-

திருமணம் என்பது இருமனங்கள் இணைவது என்ற நிலையை தாண்டி கவுரவத்தின் வெளிப்பாடாக மாறிவிட்டது. முன்பெல்லாம் திருமணம் என்பது தாலிகட்டும் நிகழ்ச்சிதான். அப்போது உறவினர்கள் கூடி மணமக்களை வாழ்த்திவிட்டு, விருந்து சாப்பிட்டு கலைந்துசெல்வார்கள். இப்போது திருமணம் ஒரு நாள். வரவேற்பு ஒரு நாள் என்று திருமணம் 2 நாட்களாக மாறிவிட்டது. திருமணத்தை பொறுத்தவரை செலவுகள் அதிகம் இல்லை. ஆனால் வரவேற்பு மிகப்பெரிய நிகழ்வாக நடத்தப்படுகிறது. இதற்காக ஆகும் செலவு கட்டுப்படுத்த முடிவதில்லை. ஆடம்பரமாகவும், வறட்டு கவுரவத்துக்காக செலவு செய்வதாகவும் இருக்கிறது.

வசதி இருக்கிறவர்கள் எப்படி வேண்டுமானாலும் திருமணத்தை கொண்டாடலாம். ஆனால், அந்த கொண்டாட்டம் இல்லாதவர்கள், நடுத்தர மக்களின் மனநிலையை மாற்றுகிறது. திருமணம் குறித்து பேசும்போதே, எங்கள் அண்ணன் மகனுக்கு இப்படி செய்தார்கள். அதுபோன்று செய்ய வேண்டும் என்று பேசும் கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. மணமகன், மணமகள் குறித்தும், அவர்களின் விருப்பங்கள் குறித்தும் பேசும்முன்பே, மண்டப கட்டணம் குறித்து பேச்சு வருகிறது. இது ஆரோக்கியமானது அல்ல. திருமணங்கள் மகிழ்ச்சிக்காக இருக்க வேண்டும். ஆனால், இப்போது திருமணங்கள் செய்யும் 90 சதவீதம் பேர் கடனாளிகளாக நிற்கிறார்கள். திருமணம் ஒரே நாளில் முடிந்து விடுவது இல்லை. தொடர்ந்து சீர், திருவிழா, பண்டிகை, குழந்தை பிறப்பு என்று பல விஷயங்கள் உள்ளன. பலர் திருமணத்தை கடன் வாங்கி ஆடம்பரமாக செய்து விட்டு, முறையாக செய்யவேண்டிய பல விஷயங்களைசெய்ய முடியாமல் கூனிக்குறுகுவதை பார்க்கிறோம். இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் வரும். எனவே திருமணத்தில் தேவையற்ற ஆடம்பர செலவுகள் தேவைதானா? என்பதை முடிவு செய்யவேண்டிய தருணமாக இது உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர் மு.இந்திரகுமார்

சங்கம்துறை பகுதியை சேர்ந்த ஆசிரியர் மு.இந்திரகுமார் கூறியதாவது:-

திருமணம் என்பது வாழ்வில் ஒருமுறை வரும் மறக்க முடியாத மகிழ்வான நாள். இந்த நாளில் எல்லா சொந்த பந்தங்களும் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மணமக்களை அனைவரும் சேர்ந்து வாழ்த்த வேண்டும். வயிறார அனைவருக்கும் உணவு படைக்க வேண்டும் என்பதுதான் நம் முன்னோர்கள் கொண்டாடிய திருமணவிழா. ஆனால், இன்று திருமண வீடுகளில் கவுரவத்துக்காக தேவையற்ற உணவுகள் சமைத்து வைக்கப்படுகின்றன. 50 வகை உணவுகள் வைத்தோம் என்று பெருமை பேசுவதை விட அதில் எத்தனை உணவுகள் விரும்பி சாப்பிடப்பட்டன என்பதை பார்க்க வேண்டும். இந்திய அளவில் திருமண நிகழ்வுகளில் சமைக்கப்படுவதில் 40 முதல் 50 சதவீதம் உணவுகள் வீணாகி குப்பைக்கு செல்கிறது. அதே நேரம் ஒரு வேளை உணவு கிடைக்காத கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். உணவு தட்டுப்பாட்டை விளைச்சல் மூலம் மட்டுமே நீக்க முடியாது. தேவையில்லாமல் உணவை வீணாக்காமல் இருந்தாலும் உணவு தட்டுப்பாட்டை நீக்க முடியும். எனவே தேவைக்கு ஏற்ப, சாப்பிட தகுந்த உணவுகளை திருமணங்களில் சமைக்க வேண்டும்.

முன்காலத்தில் ஒரு திருமணம் என்றால் அதுசார்ந்த பணிகள் செய்யும் 10 பேருக்காவது வேலை வாய்ப்பு கிடைக்கும். நேரடியாக லாபமும் வரும். ஆனால், இப்போது அனைத்து பணிகளையும் ஒரே ஏஜெண்டு மூலம் செய்கிறபோது, பலருக்கு வேலை கிடைத்தாலும், லாபம் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கிறது. ஆடம்பரத்துக்காக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, திருமண மகால்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

இந்த செலவுகளுக்கு எல்லாம் மணமக்களின் பெற்றோர்தான் பணம் தர வேண்டும். அடுத்தவர்களை பார்த்து நாமும் அதுபோல செய்ய வேண்டும் என்று திருமணத்தை நடத்தி கடனாளி ஆகி நிற்கும் தந்தையர்களின் நிலை பரிதாபமாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

எல்.ஜான் அலோசியஸ்

நாடார் மேடு பகுதியை சேர்ந்த எல்.ஜான் அலோசியஸ் கூறியதாவது:-

நமக்கு பிறகு, நம் குழந்தைகளுக்காகத்தான் நாம் வாழ்கிறோம். அவர்களின் வாழ்க்கையில் ஒரு முறை நடக்கும் மகிழ்ச்சியான நிகழ்வு அதை மகிழ்ச்சியாக நடத்த வேண்டும். அந்த மகிழ்ச்சி கடன் இல்லாத வகையில் அமைய வேண்டும். கிறிஸ்தவ முறை திருமண விழாக்கள் பெரும்பாலும் அசைவ விருந்தாக இருக்கிறபோது உணவு செலவே ரூ.10 லட்சத்தை தாண்டி விடும். மணமக்களின் உடை, இதர செலவுகள் அதிகமாக இருக்கிறது. அதை நினைத்தால் சிரமமாகத்தான் இருக்கும். எனவே யாராக இருந்தாலும் தங்களால் இயன்ற செலவை மட்டுமே செய்ய வேண்டும். இன்னொருவரை பார்த்து அதுபோல செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக அது மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தி விடும். ஆடம்பரமாக நிகழ்ச்சியை நடத்துவதும், எளிமையாக நடத்துவதும் பொருளாதார நிலையை பொறுத்தது. ஆனால் குறைவில்லாத மகிழ்ச்சி இருக்க வேண்டும். அது நாம் எளிமையையோ, ஆடம்பரத்தையோ ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில்தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறினாலும், பெரும்பாலும் ரொக்கங்களில்தான் நிச்சயிக்கப்படுகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. மஞ்சள் துண்டு, மஞ்சள் கயிறு தாலிக்கு போதும். கூரைப்புடவையும், வேட்டி-சட்டையும் உடுத்திக்கொள்ள போதும். சீதனமாக பாயும், தலைகாணியும், தட்டு-டம்ளரும் போதும் என்ற ஒரு காலம் இருந்தது. ஒரு காலம் என்ன, இப்போதும் எளிமையாக திருமணம் செய்யும் பல குடும்பத்தினர் இப்படியே இருக்கிறார்கள். வசதி இருந்தாலும் கூரைப்புடவை கட்டி எளிமையாக திருமணம்செய்யும் குடும்பங்களும் உண்டு. வசதி இல்லாத நிலையிலும் கடன் வாங்கி பல ஆயிரம் பணம் செலவு செய்து ஆடை வாங்கும் குடும்பங்களும் உண்டு. இதற்கு வறட்டு கவுரவம் என்ற மனநிலையும் காரணமாக இருக்கிறது.

உணவு விஷயத்தில் தாராளமாக இருக்கலாம். ஆனால், தேவையற்ற உணவுகள் சமைக்கப்பட்டு வீணாக்கப்படுவது தவிர்க்கப்படலாம். கொண்டாட்டங்கள் தேவையா? என்றால் அது பொருளாதாரம் சார்ந்த விஷயம். எதுவும் இல்லாத இடத்திலும் மகிழ்ச்சி இருக்கும். அனைத்தும் இருந்து உடன் கடனும் இருந்தால் மகிழ்ச்சி காணாமல் போகும். இன்று பெரும்பாலான குடும்பங்கள் ஆடம்பரம் மகிழ்ச்சி தரும் என்று கடனை வாங்கி செலவு செய்து மகிழ்ச்சியை இழந்து, கடனில் தத்தளிக்கிறது. எனவே திருமணம் என்றால் பெற்றோர்கள் கலங்கிப்போவது இயற்கையாக நிகழ்கிறது.

மக்களின் கருத்து

மொத்தத்தில் திருமணம் என்பது உறவுகளின் சங்கமமாக இருக்கலாம். அதில் ஆடம்பரம் தேவையில்லை, அன்பு மிகுதியாக இருந்தால் போதும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.


Next Story