சிவகிரி அருகே கோவில் திருவிழாவில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் ரூ.21 ஆயிரத்துக்கு ஏலம்
சிவகிரி அருகே கோவில் திருவிழாவில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் ரூ.21 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
சிவகிரி
சிவகிரி அருகே கோவில் திருவிழாவில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் ரூ.21 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
மகாசிவராத்திரி விழா
சிவகிரி அருகே விளக்கேத்தி புது அண்ணா மலைபாளையத்தில் பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழா 3 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். 3-வது நாளான நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து சாமிக்கு அபிஷேகம் செய்தனர்.
பின்னர் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சாமிக்கு 1,008 வாழைப்பழங்கள் படைத்து பூஜை செய்யப்பட்டது. மாலை 7 மணி அளவில் 108 வாழை இலைகளில் பச்சைபயறு பரிமாறி பூஜை செய்யப்பட்டது. அதன்பின்னர் பச்சைபயறு சமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
எலுமிச்சை ரூ.21 ஆயிரம்
இதைத்தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் முன்பாக பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழம் ஏலம் விடப்பட்டது. இதனை பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இதில் பக்தர் ஒருவர் ஒரு எலுமிச்சை பழத்தை ரூ.21 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். பின்னர் சாமி நெற்றியில் வைக்கப்பட்ட 10 கிராம் வெள்ளிக்காசை மற்றொரு பக்தர் ரூ.27 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுத்தார்.
அதேபோல் சாமி கையில் அணிவிக்கப்பட்டிருந்த 15 கிராம் எடையுள்ள வெள்ளி மோதிரத்தை பக்தர் ஒருவர் ரூ.32 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். இதுதவிர கோவில் திருவிழா காண வந்த பக்தர்கள் அனைவருக்கும் தலா ஒரு சீப்பு வாழைப்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது.