பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து குறைந்தது


பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து குறைந்தது
x

ஆந்திர மாநில விவசாயிகள் தண்ணீர் எடுப்பதால் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வரும் நீர் வரத்து குறைந்தது.

திருவள்ளூர்

ஆந்திர மாநில விவசாயிகள் தண்ணீர் எடுப்பதால் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வரும் நீர் வரத்து குறைந்தது.

பூண்டி ஏரிக்கு...

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றும் பிரதான ஏரியாக பூண்டி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி கடந்த மாதம் 4-ம் தேதியிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதிகபட்சமாக வினாடிக்கு 310 கன அடி தண்ணீர் வந்து சேர்ந்தது.

நீர் வரத்து குறைவு

ஆந்திர மாநில விவசாயிகள் சாகுபடிக்கு கிருஷ்ணாநீர் எடுப்பது வழக்கம். அவர்கள் அதிகமாக தண்ணீர் எடுக்கும் போது பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைவது வழக்கம். சில தினங்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் விவசாயிகள் தண்ணீர் எடுக்கவில்லை. இதனால் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 160 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது. தற்போது விவசாயிகள் தண்ணீர் எடுத்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. நேற்று காலை வினாடிக்கு 110 கனஅடி விதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை நிலவப்படி ஏரியின் நீர் மட்டம் 27.63 அடியாக பதிவாகியது. 1.252 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி விதம் பேபி கால்வாயில் வெளியேற்றப்படுகிறது.


Next Story