கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த மகனை வெட்டிக் கொன்ற தந்தை - மருமகள் கவலைக்கிடம்

காதல் திருமணம் செய்த மகனை அவரது தந்தையே வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது மனைவி மற்றும் மகன் சுபாஷுடன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் தண்டபாணியின் மகன் சுபாஷ் அனுஷா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த தண்டபாணி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் காதலை கைவிடும்படி சுபாஷிடம் கூறி வந்துள்ளார்.
இதற்கிடையே 3 மாதங்களுக்கு முன்பு அனுஷாவை திருமணம் செய்து கொண்ட சுபாஷ், நேற்று தனது மனைவியுடன் சொந்த ஊரான அருணபதி கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் தனது பாட்டி கண்ணம்மா(தண்டபாணியின் தாய்) வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதனை அறிந்து அங்கு சென்ற தண்டபாணி, அரிவாளைக் கொண்டு தனது மகன் சுபாஷ், மருமகள் அனுஷா மற்றும் தாய் கண்ணம்மா ஆகியோரை சரமாரியாக வெட்டினார். இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடினார்.
இந்த தாக்குதலில் சுபாஷ் மற்றும் கண்ணம்மா இருவரும் உயிரிழந்தனர். அனுஷா உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் தண்டபாணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.






