கிருஷ்ணகிரி: எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுத்ததை கண்டித்து மக்கள் சாலைமறியல்- போலீசார் தடியடி


கிருஷ்ணகிரி: எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுத்ததை கண்டித்து மக்கள் சாலைமறியல்- போலீசார் தடியடி
x

மக்களின் சாலை மறியல் போராட்டத்தால், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கி.மீ தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. இதனிடையே ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் சின்னதிருப்பதி கோவில் திருவிழாவையொட்டி இன்று எருது விடும் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இதற்கு, உாிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் விழாவையொட்டி அந்த பகுதியில் உள்ள காலி இடத்தை சீரமைத்து, தடுப்புகள் மற்றும் மேடை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். 100-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகளை பிடிக்க எராளமான இளைஞர்களும் அங்கு திரண்டனர். ஆனால், எருது விடும் விழாவை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாததால் தடை விதிக்கப்பட்டது.

அதிகாரிகளும், போலீசாரும் அங்கு வந்து விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கூறி அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால் அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் ஆத்திரம் அடைந்தனர். திடீரென கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் திரண்ட அவர்கள் சாலையின் நடுவே கற்களை கொட்டி போக்குவரத்தை முடக்கினர்.

மேலும் அவ்வழியாக வந்த வாகனங்களை மறித்து அவற்றின் மீது ஏறிநின்று மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். இந்நிலையில் இளைஞர்களின் போராட்டம் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனாலும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். ஏராளமான அரசு பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால் மீண்டும் அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கல்வீசினர். இதில் போலீசார் சிலருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.

சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால், வாகனங்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பின்னர் போலீசார் படிப்படியாக போக்குவரத்தை சீர் செய்தனர்.


Next Story