குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி


குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி
x

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தொடங்கப்படும்போது இளைஞர்கள், மாணவர்களுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பு கிடைக்கும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்தார்.

திருவள்ளூர்

சென்னையை அடுத்த வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் உள்ள ராமானுஜர் என்ஜினீயரிங் கல்லூரியில் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி தாளாளர் எம்.நித்ய சுந்தர், கல்லூரி செயலாளர் ஜி.காமராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.தனபால் வரவேற்றார்.

விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கலந்துகொண்டு 800 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அண்ணா பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்த 50 மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களையும் அவர் வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் சிவன் கூறியதாவது:-

இங்கு பட்டம் பெற்ற மாணவர்கள் தொழில் தொடங்குவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை வைத்துள்ளது. பட்டம் பெற்ற மாணவர்கள் வீட்டிலேயே உட்காராமல் வெளியே வந்து தேடி பார்த்தால் வாய்ப்புகள் நிறைய உள்ளது. அந்த வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி தொழில் அதிபர்களாக மாறவேண்டும்

இஸ்ரோவில் புதியதாக ககன்யான் செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்பிட மும்முரமான வேலைகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அடுத்த பணியாக சந்திரயான் 3 செயற்கைகோளும், சூரியனை ஆராய கூடிய ஆதித்யா எல் -1 ஆகிய செயற்கைகோள்களும் தயாராகி வருகிறது. பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் நில எடுப்பு முடிந்த பிறகு தொடங்கப்போகிறார்கள். ராக்கெட் ஏவுதளத்தில் கட்டிடம் கட்டுவதற்கு மண் தரம் வலிமை குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஆய்வுகள் முடிவுற்ற பிறகு பணிகள் தொடங்கும்.

குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால் உள்ளூர் பகுதிகள் நல்ல முன்னேற்றம் அடையும். தினசரி வேலை பார்ப்பதற்கு நிறைய ஆட்கள் தேவைப்படுவதால் இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

சிறிய ரக ராக்கெட்டுகள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ராக்கெட் உபகரணங்கள் மும்பை போன்ற இடத்தில் இருந்து கொண்டு வருவதற்கு பதிலாக அருகில் உள்ள இடங்களில் உற்பத்தி செய்து கொண்டு வந்தால் போக்குவரத்து செலவு உள்பட பல செலவுகளை குறைத்து ராக்கெட் உபகரணங்களை எளிதாக பெறலாம்.

எனவே அந்த பகுதியில் பல தொழிற்சாலைகள் உற்பத்தியில் ஈடுபடும். இதனால் தொழில்துறை மேம்பாடு அடைவற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. தொழிற்சாலைகள் வரும்போது அந்த பகுதி முழுவதும் நல்ல முன்னேற்றம் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

விண்வெளி துறை நிறுவனங்களில் அதிக இளைஞர்களுக்கு வேலை கிடைத்து வருகிறது. ராக்கெட் உருவாக்கும் தொழில்நுட்பத்தில் அதிக இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். விண்வெளி துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளது.

எஸ்.எஸ்.எல்.வி.டி. 2 வெற்றி பெற்றது ஒரு நல்ல காரியம். இதன் மூலம் வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் உள்ள சிறிய சிறிய சேட்டிலைட்டுகளை ராக்கெட் மூலம் ஏவுவதற்கு ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story