கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் - டிடிவி தினகரன்


கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் - டிடிவி தினகரன்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 24 Nov 2023 7:23 AM GMT (Updated: 24 Nov 2023 7:32 AM GMT)

புலிக்கொரடு கிராமத்தில் 4 தலைமுறைகளாக வசித்து வரும் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் புலிக்கொரடு கிராமம் ராஜீவ்காந்தி நகரில் நான்கு தலைமுறைகளாக வசித்து வரும் நூற்றுக்கும் அதிகமான கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும் தமிழ்நாடு அரசையும் வலியுறுத்துகிறேன்.

காப்புக்காடு வன எல்லையோரத்தில் வசித்து வரும் கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தாம்பரம் நகராட்சி நகர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

பட்டா வழங்கப்பட வேண்டிய நிலப்பரப்பிற்கு ஈடாக வேதநாராயணபுரம் கிராமம் தேவர்மலைப் பகுதியில் இருமடங்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு வனத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையிலும் பட்டா வழங்குவதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என அப்பகுதி குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, ராஜீவ்காந்தி நகரில் வசிக்கும் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்துமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story