திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம்: அரசை கண்டித்து திருச்சியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து திருச்சியில் 20-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம்: அரசை கண்டித்து திருச்சியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், விடியா திமுக ஆட்சியில் கடந்த மூன்றாண்டு காலமாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலைகள் அனைத்தும் போக்குவரத்திற்கும், சாலையில் செல்வதற்கும் லாயக்கற்ற நிலையில் உள்ளது.

மேலும், சாலைகளில் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் விபத்துக்குள்ளாவதாகவும், இங்கு ஏற்படக்கூடிய காற்று மாசு காரணமாக சுவாசக் கோளாறு மற்றும் சருமப் பிரச்சினைக்கு ஆளாவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

சொத்து வரி, வீட்டு வரி, குப்பை வரி, பாதாள சாக்கடை இணைப்புக் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை விடியா திமுக அரசின் உத்தரவுப்படி மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தி உள்ளதால் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

* எனது தலைமையிலான அம்மா ஆட்சியின்போது, மக்கள் நலன் கருதி திருச்சி மாநகராட்சியில் "Smart City" அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பல்வேறு நலத் திட்டப் பணிகள், சாலைப் பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள், பல இடங்களில் உடற்பயிற்சிக் கூடங்களுடன் கூடிய சாலையோர பூங்காக்கள், கைப்பிடிகளுடன் கூடிய நடை மேடைகள், பல சமூக நலத் திட்டப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வந்தன. ஆனால், விடியா திமுக அரசு பதவியேற்றது முதல், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத திமுக அரசின் மெத்தனப் போக்கிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நிலையில், திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளைக் கண்டித்தும்; கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பராமரிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திமுக அரசைக் கண்டித்தும்; பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், உயர்த்தப்பட்டுள்ள பல்வேறு வரிகளை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், 20.8.2024 செவ்வாய் கிழமை காலை 10.30 மணியளவில், மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com