கூடலூர் பகுதியில் தொடர் மழையால் மண் சரிவு அபாயம்-பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சம்
கூடலூர் பகுதியில் தொடர் மழையால் கோத்தர் வயல் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அதிகாரிகள் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கூடலூர்
கூடலூர் பகுதியில் தொடர் மழையால் கோத்தர் வயல் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அதிகாரிகள் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பாலத்தில் விரிசல்
கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பரவலாக தொடர் மழை பெய்தது. தொடர்ந்து காலையிலும் சாரல் மழை காணப்பட்டது. மேலும் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளான தேவர்சோலை, தேவாலா, ஓ வேலி, பந்தலூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் மதியம் 1 மணி அளவில் லேசான வெயில் தென்பட்டது. அதன் பின்னர் 2 மணிக்கு பிறகு பலத்த மழை பெய்தது. இதனிடையே கூடலூர் கோத்தர்வயல் பகுதியில் உள்ள பாலத்தின் கரையோரம் விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாதவாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனங்களும் விபத்தில் சிக்கும் நிலை காணப்பட்டது.
இரும்பு தடுப்புகள் வைப்பு
தகவல் அறிந்த கூடலூர் நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரும்பு தடுப்புகளை வைத்தார். பின்னர் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதேபோல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறை அலுவலர்களும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெள்ள அபாயம் உள்ள இடங்களில் ஆய்வு நடத்தினர். இதேபோல் ஆபத்தான மரங்கள் இருந்தால் பொதுமக்கள் புகாரின் பேரில் உடனடியாக அகற்றும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.