வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்
வேலூரில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கோர்ட்டு முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு வேலூர் பார் அசோசியேசன் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். கூட்டுக்குழு மாநில பொருளாளர் டி.ரவி வரவேற்றார். அட்வகேட் அசோசியேசன் தலைவர் ரவிராமன், மகளிர் வழக்கறிஞர் சங்க தலைவர் சுமதிகபிலன், வக்கீல்கள் எம்.பாஸ்கரன், காஞ்சனா அறிவழகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், மத்திய, மாநில அரசு உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும். வழக்கறிஞர் சேமநல நிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும். கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில் வக்கீல்கள் பாலசந்தர், கவிதா உள்பட பலர் கோர்ட்டை புறக்கணித்து கலந்து கொண்டனர். முடிவில் வக்கீல்கள் பாஸ்கர், ராஜ்குமார் ஆகியோர் நன்றி கூறினர்.