ஜனவரி 13ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்...!


ஜனவரி 13ஆம் தேதி வரை சட்டப்பேரவை  கூட்டத்தொடர்...!
x

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13-ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடப்பாண்டில் தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டம் இன்று அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கியது. வழக்கமாக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இன்று 2023ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் என்பதால் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றிய போது, சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்காமல் முழுமையாக கடந்து சென்றார். இதற்கு சட்டசபையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார். பின்னர் தேசிய கீதம் பாடி முடிப்பதற்கு முன்னதாக ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளியேறினார்.

தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் 13ஆம் தேதி வரை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என முடிவு எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அப்பாவு கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜனவரி 13 வரை நடத்த அலுவல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாளை இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு பேரவை ஒத்திவைக்கப்படும். இந்த தொடரில் கேள்வி நேரங்கள் இடம்பெறும். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கடைசி நாளில் முதல்-அமைச்சர் உரையாற்றுவார்.

தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகு கவர்னர் வெளியேறுவதே மரபு. ஆனால், தேசிய கீதத்திற்கு முன்பே கவர்னர் வெளியேறியதால் நாட்டை அவமானப்படுத்தியதாக நான் நினைக்கிறேன்.

தமிழக அரசு தயாரித்த உரையில் சில பகுதிகளை நீக்கியும், சேர்த்தும் கவர்னர் படித்துள்ளார். அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பெயரை கூட படிக்காதது வேதனை அளிக்கிறது.

மத்திய அரசு தயாரித்த உரையை குடியரசுத் தலைவர் படிக்கிறார். ஆனால், பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. உயர்பதவிக்கு ஆசைப்பட்டு கவர்னர் இப்படி நடந்து கொள்கிறார் என்ற சந்தேகம் எழுகிறது. அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய கவர்னரே ஏன் இப்படி நடந்து கொண்டார் எனத் தெரியவில்லை என்றார்.


Next Story