பெரியார் பல்கலைக்கழகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை


பெரியார் பல்கலைக்கழகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
x

சர்ச்சைக்குரிய வினாத்தாள் தயாரித்த பேராசிரியர் குழு மீது நடவடிக்கை எடுக்க கோரி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

சேலம்

கருப்பூர்:-

சர்ச்சைக்குரிய வினாத்தாள் தயாரித்த பேராசிரியர் குழு மீது நடவடிக்கை எடுக்க கோரி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

முற்றுகை போராட்டம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 14-ந் தேதி நடத்தப்பட்ட பருவத்தேர்வில் முதுகலை வரலாறு மாணவர்களுக்கு கேட்கப்பட்ட கேள்வி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில் தமிழ்நாட்டில் தாழ்ந்த சாதி யார்? என்று ஒரு மதிப்பெண் வினா கேட்கப்பட்டு இருந்தது. இது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே கடும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வினாத்தாளை தயாரித்த பேராசிரியர் குழு மீது நடவடிக்கை எடுக்க கோரி, நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பூர் சுங்கச்சாவடி அருகில் இருந்து ஊர்வலமாக பெரியார் பல்கலைக்கழகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். பின்னர் பல்கலைக்கழக நுழைவுவாசலில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் இமயவர்மன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு பொறுப்பாளர் பாவேந்தன், மேலிட பொறுப்பாளர் நந்தன், மண்டல பொறுப்பாளர் நாவரசன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ஆறுமுகம், காடையாம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் சாம்ராஜ் குரு, தொகுதி பொறுப்பாளர் பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷம்

இதில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தந்தை பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் இடையே சாதி உணர்வை தூண்டும் நிர்வாகத்தை கண்டிக்கிறோம், சர்ச்சைக்குரிய வினாத்தாள் தயாரித்த அனைவரையும் பணி நீக்கம் செய்து, சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

இந்த முற்றுகை போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும், கூடுதல் துணை கமிஷனர் ரவிச்சந்திரன், சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் கருப்பூர் தமிழரசி, சூரமங்கலம் சிவக்குமார், கருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் அங்கு வந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரின் உறுதிமொழியை ஏற்று அந்த கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த முற்றுகை போராட்டத்தால் பெரியார் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு நிலவியது.


Next Story