ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்
நாகையில் வாகனசோதனையின்போது ஆட்டோவில் கடத்தி வந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகையில் வாகனசோதனையின்போது ஆட்டோவில் கடத்தி வந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
வாகன சோதனை
நாகை மாவட்டத்தில் வெளிமாநில மது மற்றும் சாராய கடத்தல்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதற்காக தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நாகை நகர் பகுதிகளில் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தீமிதி திடல் அருகே சந்தேகத்துக்கு இடமாக வந்த ஆட்டோவை சோதனை செய்வதற்காக வழிமறித்தனர். அப்போது போலீசாரை கண்டதும் ஆட்டோவை அதே இடத்தில் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
மது கடத்தல்
இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவில் சோதனை செய்த போது அதில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மது பாட்டில்களுடன் ஆட்டோவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், அதனை டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வ.உ.சி. தெருவை சேர்ந்த திலிப்குமார் என்பவர் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாதவாறு ஆட்டோவில் மது கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாகை டவுன் போலீசார் தப்பி ஓடிய திலிப்குமாரை வலை வீசி தேடி வருகின்றனர்.
போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
இதனிடையே இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், டவுன் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஆட்டோ மற்றும் மது பாட்டில்களை பார்வையிட்டார். தொடர்ந்து திறமையாக செயல்பட்டு மது கடத்தலை தடுத்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.