காரில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் சாராயம் பறிமுதல்

காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
சீர்காழி:
காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
ரகசிய தகவல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதிக்கு காரைக்காலில் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சீர்காழி அருகே வள்ளுவக்குடி பகுதியில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், அசோக் குமார், சிதம்பரம் ராஜாஜி, மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட்டம்
அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்தினர். இதனால் காருக்கு பின்னால் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிள்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.இதையடுத்து அந்த காரில் போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் அந்த காரில் 2,000 சாராய பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து காரில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.
ரூ.7 லட்சம் சாராயம் பறிமுதல்
விசாரணையில் அவர்கள், பாண்டூர் வடக்கு வெளி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராஜேஷ் (வயது36), சீர்காழி அருகே கூத்தியம்பேட்டை பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் பிரபு (33) என்பதும், இவர்கள் காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு காரில் சாராயம் கடத்தி வந்ததும், பின்னால் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் காருக்கு பாதுகாப்பாக வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், பிரபு ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான சாராய பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.






