2,500 சாமி சிலைகளை கோவில்களுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும்; முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தல்


2,500 சாமி சிலைகளை கோவில்களுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும்; முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தல்
x

சென்னை அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ள 2,500 சாமி சிலைகளை கோவில்களுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.

திண்டுக்கல்

சென்னை அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ள 2,500 சாமி சிலைகளை கோவில்களுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.

35 ஆயிரம் கோவில்கள்

திண்டுக்கல் மாவட்ட உலக சிவனடியார்கள் கூட்டம் மற்றும் உழவார பணிக்குழுவை சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், மதுரை ஆதினம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் மதுரை ஆதீனம் பேசுகையில், தமிழகத்தில் 35 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த வேண்டும். அப்போது தான் அவர்களின் மனதுக்கு புத்துணர்வு கிடைக்கும். திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது திண்டுக்கல் மக்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

2,500 சாமி சிலைகள்

கூட்ட முடிவில் முன்னாள் போலீஸ் ஐ.ஜி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சாமி தரிசனத்துக்காக செல்லும் பக்தர்கள் உண்டியல்களில் பணத்தை காணிக்கையாக செலுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் அர்ச்சகர்களுக்கு அந்த பணத்தை கொடுக்கலாம்.

கோவில்களில் இருக்கும் சாமி சிலைகளுக்கு அபிஷேகம், ஆராதனை நடத்தப்படும். அப்போது தான் அந்த சிலைகள் உருவாக்கப்பட்டதற்கான பலன் கிடைக்கும். பழமையான கோவில்களில் இருந்து திருடப்பட்ட சாமி சிலைகளை அரசு மீட்டெடுத்துள்ளது. ஆனால் அந்த சிலைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கோவில்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. மாறாக அருங்காட்சியகங்களில் காட்சிப்பொருளாக வைக்கப்படுகின்றன.

அந்த வகையில் சென்னை அருங்காட்சியகத்தில் 2 ஆயிரத்து 500 சாமி சிலைகள் காட்சி பொருளாக உள்ளன. அவற்றை அந்தந்த கோவில்களில் மீண்டும் பிரதிஷ்டை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அருங்காட்சியகங்களில் சாமி சிலைகளை வைத்திருப்பது ஆன்மிக உணர்வாளர்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. அவற்றை மக்கள் வழிபடும் இடத்தில் வைக்க வேண்டும் என்பதே அவர்களின் நீண்டகால கோரிக்கை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார். விழாவில் சிவனாடியார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அடையாள அட்டை பெற்றனர்.


Related Tags :
Next Story