லாரி மோதி ரெயில்வே கேட் பழுது: போக்குவரத்து பாதிப்பு


லாரி மோதி ரெயில்வே கேட் பழுது: போக்குவரத்து பாதிப்பு
x

குளித்தலையில் லாரி மோதி ரெயில்வே கேட் பழுதானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்

கரூா் மாவட்டம், குளித்தலையில் உள்ள குளித்தலை - மணப்பாறை சாலையில் ரெயில்வேகேட் ஒன்று உள்ளது. குழாய் வடிவிலான இந்த ரெயில்வே கேட் மேலும் கீழும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கரூர் மற்றும் திருச்சி மார்க்கமாக செல்லும் ரெயில்கள் குளித்தலை வழியாக கடந்து செல்லும் பொழுது இந்த ரெயில்வே கேட் மூடி பின்னர் திறக்கப்படும். இந்த நிலையில் நேற்று இந்த ரெயில்வே கேட்டு வழியாக சென்ற லாரி ஒன்று கேட்டின் மீது மோதிவிட்டு பின்னர் நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

லாரி மோதியதால் ரெயில்வே கேட் சேதமடைந்தது. இது குறித்து ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பழுதான ரெயில்வே கேட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரெயில்கள் வரும் பொழுது எந்த வாகனங்களும் ரெயில்வே கேட்டை கடந்து செல்லாத வகையில் அவர்கள் தடுப்புகள் அமைத்து இருந்தனர். அவ்வப்போது வாகனங்கள் ரெயில்வே கேட்டை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரெயில்வே கேட் பழுது பார்க்கப்பட்ட பொழுது வாகனங்கள் எதுவும் செல்ல அனுமதிக்க படாத காரணத்தால் சுமார் ஒரு மணி நேரம் ரெயில்வே கேட்டின் இருபுறம் உள்ள சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த குளித்தலை போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதுபோல ரெயில்வே பணியாளர்கள் பழுதடைந்த ரெயில்வே கேட்டை துரிதமாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த ரெயில்வே கேட் முழுவதுமாக சரி செய்யப்பட்ட பின்னர் மாலை 5.30 மணிக்கு மேல் வழக்கமான நேரங்களில் ரெயில்வே கேட் திறந்து மூடப்பட்டது. ரெயில்வே கேட் பழுதடைந்த காரணத்தினால் சுமார் ஒரு மணி நேரம் தொடர் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story