கள்ளக்காதலியை தாக்கி கொன்ற போலீஸ்காரர் மீதான வழக்கை 5 மாதத்தில் விசாரித்து முடிக்க கெடு-கீழ்கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கள்ளக்காதலியை தாக்கி கொன்ற போலீஸ்காரர் மீதான வழக்கை 5 மாதத்தில் விசாரித்து முடிக்க கெடு-கீழ்கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கள்ளக்காதலியை தாக்கி கொன்ற போலீஸ்காரர் மீதான வழக்கை 5 மாதத்தில் விசாரித்து முடிக்க கெடு விதித்து கீழ்கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா. சில ஆண்டுகளுக்கு முன்பு கணவருடனான பிரச்சினை காரணமாக ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்க சென்றார்.

அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் ஜெயக்குமாருக்கும், அமுதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் கம்பம் பகுதியில் தனி வீட்டில் அமுதாவை தங்க வைத்து, அவ்வப்போது அங்கு சென்று வந்தார்.

இதற்கிடையே வேறொரு பெண்ணுடன் ஜெயக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமுதாவுக்கு தெரிய வந்தது. அதனால் ஜெயக்குமாருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட அவர், கேரளாவுக்கு வேலைக்கு செல்ல முயற்சி செய்து வந்தார். அவர் கேரளாவுக்கு செல்லக்கூடாது என ஜெயக்குமார் மிரட்டி வந்துள்ளார். இது சம்பந்தமாக அமுதா, போலீசில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் குடிபோதையில் இருந்த ஜெயக்குமார் அமுதாவை சரமாரியாக தாக்கியதில், அவர் இறந்தார். இந்த சம்பவத்தில் ஜெயக்குமார் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது தனக்கு ஜாமீன் கேட்டு ஜெயக்குமார் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கூடுதல் அரசு வக்கீல் பா.நம்பிசெல்வன் ஆஜராகி, மனுதாரர், அமுதா என்பவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை ஏற்கனவே தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார். வழக்கின் தன்மையை நீர்த்துப் போகச் செய்துவிடுவார். இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் ஜெயக்குமார் மீதான கொலை வழக்கை 5 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கீழ் கோர்ட்டுக்கு உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story