திருமணம் செய்து ஏமாற்றியதாக கணவர் மீது வழக்கு:இளம்பெண்ணுக்கு கட்டாய கருக்கலைப்பா?- போலீசார் அறிக்கை அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


திருமணம் செய்து ஏமாற்றியதாக கணவர் மீது வழக்கு:இளம்பெண்ணுக்கு கட்டாய கருக்கலைப்பா?- போலீசார் அறிக்கை அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக கணவர் மீது இளம்பெண் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டதா? என்பது தொடர்பாக போலீசார் அறிக்கை அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக கணவர் மீது இளம்பெண் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டதா? என்பது தொடர்பாக போலீசார் அறிக்கை அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

காதல் திருமணம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா வையம்பட்டியை சேர்ந்த சசிகலா என்ற இளம்பெண், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

என் தந்தை கல் உடைக்கும் தொழிலாளி. நானும், அபிமணி என்பவரும் காதலித்தோம். கடந்த ஆண்டு மே மாதம் அபிமணியின் சகோதரர்கள் முன்னிலையில் எங்களுக்கு திருமணம் நடந்தது. நாங்கள் கரூர் மாவட்டத்தில் 20 நாட்கள் வசித்தோம். திடீரென எனது கணவரின் சகோதரர்கள் அங்கு வந்து என்னை தாக்கினர்.

கிடப்பில் போடப்பட்ட வழக்கு

இது குறித்து வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் நடந்த விசாரணையில், அபிமணி உன் மீது ஆசைப்பட்டதால்தான் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தோம். இனிமேல் அவனுக்கும் உனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தனர். போலீசாரும் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டனர்.

ஏமாற்றி என்னை திருமணம் செய்த என் கணவர் மற்றும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. பல மாதங்களாக போலீசார் கிடப்பில் போட்டு உள்ளனர்.

அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. உள்ளிட்ட வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

கருக்கலைப்பு

இந்த வழக்கு நீதிபதி நாகார்ஜூன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ராஜ்குமார் ஆஜராகி, மனுதாரரின் கணவர் அபிமணி ஏற்கனவே ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், மனுதாரர்தான் தன்னுடைய மனைவி என்றும், அவர் தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்றும் கூறி இருக்கிறார். அதன்பின், மனுதாரர் வயிற்றில் வளர்ந்த கருவை கட்டாயப்படுத்தி கலைத்து உள்ளனர். இது குறித்து கீழ்கோர்ட்டில் மனுதாரர் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என்றார்.

அறிக்கை தாக்கல்

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்குகளை உள்ளூர் போலீசாரிடம் இருந்து வேறு அமைப்புக்கு மாற்றக்கோரி பலர் மனுத்தாக்கல் செய்வது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

முடிவில், மனுதாரர் வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது? என்பது குறித்தும், மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Related Tags :
Next Story