நிலத்தை அளவீடு செய்ததில் அதிகாரிகள் விதிகளை மீறி இருந்தால் கடும் நடவடிக்கை- மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை


நிலத்தை அளவீடு செய்ததில் அதிகாரிகள்  விதிகளை மீறி இருந்தால் கடும் நடவடிக்கை- மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை
x

நிலத்தை அளவீடு செய்ததில் அதிகாரிகள் விதிகளை மீறி இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.

மதுரை


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா, துவரங்குறிச்சியை சேர்ந்த பாப்பம்மாள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் துவரங்குறிச்சியில் வசிக்கிறேன். என் கணவர் அய்யாவு. எங்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். என் கணவர் இறந்துவிட்டதால், பூர்வீக வீட்டில் வசித்து வருகிறேன். அந்த வீடு ஒரு நிலத்தின் நடுவில் அமைந்து உள்ளது. அந்த நிலமும் எனக்கு சொந்தமானது. இந்தநிலையில் இந்த இடத்துக்கு சொந்தம் கொண்டாடி சிலர் பிரச்சினை எழுப்பினர். இதுதொடர்பான வழக்கு கீழ்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே ஜெயலட்சுமி என்பவர் அந்த இடத்தை அளவீடு செய்து தரக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு, இடத்தை அளவீடு மட்டும் செய்து தரவும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

இதையடுத்து நான் சிகிச்சைக்காக வெளியூர் சென்ற சமயத்தில் அந்த இடத்தை அதிகாரிகள் அளவீடு செய்தனர். மேலும் அந்த இடத்தை சுற்றிலும் வேலி அமைத்துவிட்டனர். இதனால் நான் ஊருக்கு திரும்பியபோது, வேலியை தாண்டி, அங்குள்ள என் வீட்டுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நான் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளேன். எனவே கோர்ட்டு உத்தரவை மீறி, வேலி அமைத்ததற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கோர்ட்டு உத்தரவை மீறி அதிகாரிகள் வேலி அமைக்க அனுமதித்தது ஏன்? இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது தவறு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார்.

பின்னர் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஜெயலட்சுமி என்பவர் 8 வாரத்தில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.


Related Tags :
Next Story