பா.ஜ.க.வில் இருந்து பலரும் அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர் - எடப்பாடி பழனிசாமி


பா.ஜ.க.வில் இருந்து பலரும் அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர் - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 21 Feb 2024 12:20 PM IST (Updated: 21 Feb 2024 1:47 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வில் இருந்து பலரும் அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

தி.மு.க. கூட்டணியில் இருந்து எத்தனை கட்சிகள் வெளியேறுகின்றன என்று பொறுத்திருந்து பாருங்கள். இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டிலும் தீர்ப்பு வாங்கிவிட்டோம், தேர்தல் ஆணையத்திலும் தீர்ப்பு வாங்கிவிட்டோம். கூட்டணி தொடர்பாக பொறுத்திருந்து பாருங்கள், இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவித்தபிறகுதான் கூட்டணி முழுமைபெறும்.

பா.ஜ.க.வில் இருந்து பலரும் அ.தி.மு.க.வில் சேர்ந்து வருகின்றனர். ஒருகட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது அவரவர் ஜனநாயகம். அதை யாரும் தடுக்கமுடியாது, இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க.விற்கு வருகின்றனர். அ.தி.மு.க.வில் இருந்து செல்கின்றனர் என்றால் அது அவரவர் மனநிலையை பொறுத்து உள்ளது.

தேர்தலில் போட்டியிட சீட் கொடுப்பது அரசியல் வாரிசு அல்ல. தலைமை பொறுப்பு என்பதுதான் அரசியல் வாரிசு.

தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்தார் அதன்பின் அந்த கட்சிக்கு மு.க.ஸ்டாலின் தலைவரானார். அதன்பின்னர் உதயநிதி ஸ்டாலினை தி.மு.க. தலைவராக்க முயற்சி செய்கின்றனர். இதுதான் வாரிசு. கட்சி, வாரிசுகளின் குடும்பத்தின் கைகளுக்கு செல்லும். கட்சி ஒரு குடும்பத்தின் கைக்கு செல்லக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அ.தி.மு.க.வை பொறுத்தவரை என்னைப்போல் ஒரு சாதாரண தொண்டனும் உயர்ந்த நிலைக்கு வர முடியும். அது அ.தி.மு.க.வில்தான் முடியும் தமிழகத்தில் வேறு எந்தகட்சியிலும் முடியாது.

தி.மு.க.வை பொறுத்தவரை அது வாரிசு அரசியல், குடும்ப கட்சி. அது கட்சி அல்ல கார்ப்பரேட் நிறுவனம்.

அ.தி.மு.க. சுயமாக முடிவு எடுத்து செயல்படத்தான் தேசியக்கட்சிகளுடன் கூட்டணி இல்லை. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி பிரமாண்டமாக இருக்கும்' என்றார்.

1 More update

Next Story