தஞ்சையில், மாரத்தான் போட்டி
தஞ்சையில் நடந்த மாரத்தான் போட்டியில் 929 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர்;
தஞ்சையில் நடந்த மாரத்தான் போட்டியில் 929 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
மாரத்தான் போட்டி
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் மூலம் இளைஞர் திருவிழாவையொட்டி எய்ட்ஸ் பற்றிய விரிவான அறிவை மேம்படுத்திடவும், இளம்பருவ ஆரோக்கியம், மனஆரோக்கியம் மற்றும் போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டியும், கல்லூரி மாணவர்களுக்கு குறும்படம், நாடகம், மாரத்தான் போட்டி நடத்தவும் திட்டமிடப்பட்டது.அதன்படி தஞ்சையில் நேற்று மாரத்தான் போட்டி நடந்தது. தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியை கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 39 கல்லூரிகளை சேர்ந்த 619 மாணவர்களும், 310 மாணவிகளும் கலந்து கொண்டனர். இவர்கள் தென்னகப்பண்பாட்டு மையம் வரை ஓடினர்.
ரொக்கப்பரிசு
ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த பிரகதீஸ்வரனுக்கு ரூ.10 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த அப்துல்சமீதுக்கு ரூ.7 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்த ஹரிகரனுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் கலை, புவனேஸ்வரன், இளவழகன் ஆகியோருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.1000 வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த பிரியதர்ஷினிக்கு ரூ.10 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த ஹரிப்பிரியாவுக்கு ரூ.7 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்த விஜயலட்சுமிக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் சவுமியா, ஈஸ்வரி, ஸ்வேதா, காயத்ரி ஆகியோருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.1000 வழங்கப்பட்டது.ஆண்கள், பெண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மாநிலஅளவில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்டனர். மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார். இதில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட திட்ட மேலாளர் ஜெனிபர் அருள்மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.