மாசித்திருவிழா கோலாகலம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்...!


மாசித்திருவிழா கோலாகலம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்...!
x

மாசித்திருவிழாவின் 2-வது நாளையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், மாசித்திருவிழாவின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்துள்ளனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் குவிந்ததையடுத்து, கோவில் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

8-ம் திருவிழாவான 4-ந்தேதி (சனிக்கிழமை) காலை 5மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதியுலாவும், 11.30மணிக்கு பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது. 9-ம் திருவிழா 5-ந்தேதி இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா 6-ந்தேதி திங்கள்கிழமை தேரோட்டம் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

11-ம் திருவிழாவான 7-ந்தேதி இரவு 10:30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது. 12-ம் திருவிழா 8-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளில் உலா வருதல், இரவு 9மணிக்கு சுவாமி அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story