பொதுமக்களுக்கான மருத்துவ சேவை
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கான மருத்துவ சேவையை அமைச்சர்கள் காந்தி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கான மருத்துவ சேவையை அமைச்சர்கள் காந்தி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மருத்துவ சேவை
கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவை தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் திருவாசமணி வரவேற்றார். செல்லகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), மதியழகன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு திட்ட விளக்க உரையாற்றினார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
கூடுதல் நிதி
இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவை தொடங்க, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடுதல் நிதியாக ரூ.19.50 கோடி ஒதுக்கீடு செய்தார். தற்போது அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மக்களுக்கான சேவை தொடங்கி உள்ளது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 800 முதல் 1000 நோயாளிகள் மருத்துவ சேவையை பயன்படுத்தி வந்தனர்.
15 மாதங்களில், இங்கு மேம்படுத்தப்பட்டுள்ள, மருத்துவ கட்டமைப்புகளால் தற்போது ஒரு நாளைக்கு 1,800 புறநோயாளாளிகள் மருத்துவ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் 6 மாதங்களில், மருத்துவக்கல்லூரி மருத்துவ சேவை பெறும் புறநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
காப்பீட்டு திட்டம்
மேலும், மாநில எல்லையோரம் அமைந்துள்ள இந்த மாவட்டத்தில் இருந்து சிகிச்சைக்காக, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று வரும் நிலை விரைவில் மாறும். வெளிமாநிலங்களில் இருந்து மக்கள் மருத்துவ தேவைக்காக தமிழகத்திற்கு அதிகளவில் வருகின்றனர். இந்தியாவில் மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, மக்கள் பயன்பெற்று வருவது தமிழகத்தில் தான்.
மத்திய அரசு பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் ஒரு லட்சம் வரை பயன் பெறுகின்றனர். ஆனால், தமிழகத்தில் முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரை மக்கள் சிகிச்சை பெறுகின்றனர். காப்பீடு திட்டத்தின் மூலம் 1,513 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 700 படுக்கை வசதிகளுடன் செயல்பட உள்ளது.
மேம்படுத்தும் பணி
இந்த மருத்துவமனையில் 285 மருத்துவர்கள், 357 செவிலியர்கள் உட்பட 1,336 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 20 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஓசூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரூ.100 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 92 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு அமைச்சர் பேசினார்.