கிருஷ்ணகிரி கிளைச்சிறையில் மனநல விழிப்புணர்வு முகாம்


கிருஷ்ணகிரி கிளைச்சிறையில் மனநல விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 11 Oct 2023 7:30 PM GMT (Updated: 11 Oct 2023 7:30 PM GMT)

கிருஷ்ணகிரி கிளை சிறையில் மனநல விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா கலந்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:-

உலக மனநல தினத்தையொட்டி கிருஷ்ணகிரி கிளைசிறையில் சிறைவாசிகள் மற்றும் சிறை பணியாளர்களுக்கு மனநலம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி சாய்பிரியா தலைமை தாங்கி பேசுகையில், மனிதர்கள் யாரும் குற்றவாளிகளாக பிறப்பது இல்லை. சூழ்நிலை காரணமாக குற்றவாளிகளாக ஆக்கப்படுகிறார்கள். அவர்கள் மனம் திருந்தி வாழ்வதற்கும், சமூகநீதி சமமாக கிடைப்பதற்கும் சட்ட ஆணைக்குழு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. மேலும், நிரபராதிகள் தண்டிக்க கூடாது என்பதில் நீதித்துறை மிகவும் கவனமாக இருப்பதுடன், குற்றங்களை குறைக்கவே தண்டனைகள் வழங்கப்படுகிறது. இருப்பினும், அனைவருக்கும் சட்டம் சமமானது என்பதால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இலவச சட்ட ஆலோசனை வழங்கப்படுகிறது என்றார்.

முகாமில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல டாக்டர் முனிவேல் சிறைவாசிகளுக்கும், பணியாளர்களுக்கும் மனநல அழுத்தம் குறித்தும், அதை குறைப்பதற்கான வழிமுறைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார். பின்னர், சிறைவாசிகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புத்தகங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெனிபர், சிறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story