மாணவர்களின் மனஉறுதி காக்கும் மனநல நல்லாதரவு மன்றம்


மாணவர்களின் மனஉறுதி காக்கும் மனநல நல்லாதரவு மன்றம்
x

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பள்ளி மாணவர்களின் மனஉறுதி காக்கும் மனநல நல்லாதரவு மன்றத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பள்ளி மாணவர்களின் மனஉறுதி காக்கும் மனநல நல்லாதரவு மன்றத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மனநல நல்லாதரவு மன்றம்

சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 36 அரசு மருத்துவக்கல்லூரிகளில் பள்ளி மாணவர்களின் மனஉறுதி காக்கும் மனநல நல்லாதரவு மன்றம் (மனம்) மற்றும் நட்புடன் உங்களோடு மனநல சேவை 14416 இலவச சேவை எண் ஆகியவற்றை காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்து, இத்திட்டத்திற்கான விரிவாக்க வரைவு நூலையும் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சமீபகாலமாக பல்வேறு காரணங்களால் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

மாணவர்களுக்கு பயிற்சி

இந்த திட்டத்தின் மூலம் அதற்கான காரணத்தை கண்டறிந்து உரிய காலத்தில் சிகிச்சை அளிக்கும் பட்சத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வாய்ப்பு அதிகரிக்கும்.

மேலும் காலசூழ்நிலையினால் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள மாணவர்களுக்கு இத்திட்டத்தில் பயிற்சிகள் அளிக்கப்படும்.

இந்த திட்டத்தின் செயல்பாடுகள் முதற்கட்டமாக கல்லூரி மனநல டாக்டர்கள், மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். அப்பயிற்சி பெற்ற மாணவர்கள் மனம் தூதுவர் என்று அழைக்கப்படுவர். அடுத்த கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள். அப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவர்களின் நடவடிக்கை மற்றும் குணமாற்றத்தை கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்து அவர்களுக்கு மாற்றங்கள் ஏற்படுத்த சூழ்நிலைகள் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி டீன் (பொறுப்பு) டாக்டர் முத்துக்குமார், இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் பாபுஜி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் செல்வக்குமார், மருத்துவக்கல்லூரி துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீதரன், மனநல துறைத்தலைவர் டாக்டர் சிவலிங்கம், பள்ளி மாணவ, மாணவிகள், துறை அலுவலர்கள், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story