நீர்மட்டம் குறைந்ததால் மேட்டூர் அணை மீன்கள் விற்பனை அமோகம்


நீர்மட்டம் குறைந்ததால் மேட்டூர் அணை மீன்கள் விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 12 July 2023 6:45 PM GMT (Updated: 13 July 2023 11:05 AM GMT)

நீர்மட்டம் குறைந்ததால் மேட்டூர் அணை மீன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

சேலம்

மேட்டூர்

மேட்டூர் மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் உரிமம் பெற்ற சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மேட்டூர் அணையில் மீன் பிடித்து வருகிறார்கள். இவர்கள் பிடிக்கும் மீன்களை மேட்டூர் மீனவர் கூட்டுறவு சங்கத்திடம் ஒப்படைப்பார்கள். இந்த மீன்களுக்கு உரிய விலையை மேட்டூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் மீனவர்களுக்கு வழங்குவார்கள். இவ்வாறு மீனவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் மீன்களை மேட்டூர் மீனவர் கூட்டுறவு சங்கம் அருகே உள்ள மீன் விற்பனை மையத்தில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வார்கள். மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும் நேரங்களில் அணையில் பிடிபடும் மீன்களின் அளவு குறைந்தும், அணையின் நீர்மட்டம் குறையும் நேரங்களில் அணையில் பிடிபடும் மீன்களின் அளவு அதிக அளவிலும் இருக்கும்.

இந்த ஆண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் 320 நாட்களுக்கு மேலாக 100 அடிக்கு மேல் நீடித்து வந்தது. இதனால் கடந்த பல மாதங்களாகவே மேட்டூர் அணையில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் வலைகளில் குறைந்த அளவிலான மீன்களே பிடிபட்டு வந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. தற்போது அணை நீர்மட்டம் 80 அடிக்கு கீழ் குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களாக மேட்டூர் அணையில் பிடிபடும் மீன்களின் அளவு அதிகரித்துள்ளது. அதாவது அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்த நிலையில் மேட்டூர் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு நாள் ஒன்றுக்கு 250 கிலோ முதல் 300 கிலோ எடையுள்ள மீன்களே கொண்டு வரப்பட்டு விற்பனை நடந்தது. தற்போது நாள் ஒன்றுக்கு 500 கிலோ முதல் 550 கிலோ வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story