மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் வரை காலஅவகாசம் நீட்டிப்புஅமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நடைப்பயிற்சி
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் `நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தின் கீழ் 8 கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் தர்மபுரியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம், மாவட்ட கலெக்டர் குடியிருப்பு, தர்மபுரி சிப்காட் அமைய உள்ள பகுதி மற்றும் தடங்கம் மேம்பாலம் ஆகிய பகுதிகளை இணைத்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் நடைப்பயிற்சிக்கான நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி சுமார் 2 மணி நேரம் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம், வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் அமைச்சருடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
ரூ.3.78 கோடியில் சுகாதார திட்டப்பணிகள்
தொடர்ந்து அரூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சி.டி.ஸ்கேன், எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேஜை தொடக்க விழா, மாரண்டஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு தொடக்க விழா, தீர்த்தமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சத்தில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம் மற்றும் கடத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சத்தில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிட திறப்பு விழா அரூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் 4 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம், விலையில்லா கண்ணாடிகள், மருத்துவ காப்பீட்டு அட்டைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், வருவாய்த் துறையின் சார்பில் உதவித்தொகைகள், இணைய வழி வீட்டுமனை பட்டாக்கள் என 376 பயனாளிகளுக்கு ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கி பேசினார்.
விழாவில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குனர் டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி, அரூர் பேரூராட்சி தலைவர் இந்திராணி, துணைத்தலைவர் சூர்யா தனபால், தலைமை மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கம்பைநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
தகவல்கள் தவறானவை
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் தமிழ்நாடு மாநிலத்திலோ அல்லது தமிழ்நாட்டிற்கு வெளியிலோ இன்டர்ன்ஷிப் காலம் உள்பட எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். முடித்தவர்கள் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்வி நிறுவனங்களில் இருப்பிட சான்றிதழ்களுடன் முதுகலை மருத்துவ படிப்பு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள். இதற்கு மாறாக வந்த தகவல்கள் தவறானவை.
மேலும் பிற மாநிலங்களை பூர்வீகமாக கொண்டவர்கள் தமிழகத்தில் இன்டர்ன்ஷிப் காலம் உள்பட எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முடித்தவர்கள் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள திறந்தவெளி அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு மட்டுமே தகுதியானவர்கள்.
உடல் உறுப்பு தானம்
இந்தியாவிலேயே முதல்முறையாக உடல் உறுப்பு மாற்று ஆணையம் தமிழகத்தில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள 36 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு உடல் உறுப்பு தானம் பெறும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் இதில் அடங்கும்.
இருதயம், கல்லீரல், கணையம், எலும்பு, எலும்பு மஜ்ஜை, கருவிழி, தோல் ஆகிய உடற்பாகங்கள் மாற்று அறுவை சிகிச்சைக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அதற்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் முதலிடத்தில் உள்ளது.
கால அவகாசம்
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள 20 ஆயிரம் மருத்துவ பணியிடங்களில் 1,021 பணியிடங்கள் மட்டுமே தற்போது காலியாக உள்ளன. இந்த காலிபணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட தேர்வை 25 ஆயிரம் பேர் எழுதினர். ஒரு மாதத்திற்குள் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை மருத்துவம் படிப்பதற்கு 39 ஆயிரத்து 924 மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். ஆனால் இதுவரை 32 ஆயிரத்து 649 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் சான்றிதழ்கள் வாங்க கால தாமதம் ஏற்படுவதால், அவர்கள் விண்ணப்பிக்க 2 நாள் கால அவகாசம் கேட்டிருந்தனர். அதன்படி மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 10-ந் தேதி என்பதை கூடுதலாக்கி நாளை மறுநாள் (12-ந் தேதி) வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மத்திய அரசும், மாநில அரசும் ஒரே தேதியில் கலந்தாய்வு நடத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த தேதியை அறிவிக்க இன்னும் 10 நாட்கள் ஆகலாம். ஆனால் அதுவரை காத்திருக்காமல் வருகிற 16-ந் தேதி காலை 10 மணிக்கு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான தகுதி பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.