"ஊழல் பற்றி பேச அமைச்சர் ரகுபதிக்கு தகுதியில்லை" - எடப்பாடி பழனிசாமி


ஊழல் பற்றி பேச அமைச்சர் ரகுபதிக்கு தகுதியில்லை - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 8 July 2023 6:45 PM GMT (Updated: 8 July 2023 6:46 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி, “ஊழல் பற்றி பேச அமைச்சர் ரகுபதிக்கு தகுதி இல்லை” என்று கூறினார்.

தூத்துக்குடி

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். அங்கு அவர் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சணாமூர்த்தி, பெருமாள் சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து சூரசம்ஹாரமூர்த்தி சன்னதிக்கு சென்று திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டார்.

பூரண கும்ப மரியாதை

முன்னதாக அவருக்கு கோவில் அர்ச்சகர் கோட்டை மணிகண்டன் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் சென்னை திரும்பும் வழியில் தூத்துக்குடி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரின் இறப்புக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், வேதனையையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு பணி வழங்கியது தவறு. அவருக்கு நல்ல ஓய்வு அளித்திருக்க வேண்டும். அவரின் உயிரிழப்பு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, வீட்டிலும், பணியிலும் அவருக்கு மன அழுத்தம் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். அப்படியென்றால் அவருக்கு எதனால் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் காவலர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட அவர்களுக்கு காவலர் நலவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அந்த திட்டம் நடைமுறையில் இல்லை. அந்த திட்டம் நடைமுறையில் இருந்தால் இதுபோல் நேர்மையும், திறமையும் உள்ள காவல்துறை உயர் அதிகாரி தற்கொலை செய்திருக்க மாட்டார். எனவே மீண்டும் அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேலும் காவலர்களுக்கு உரிய ஓய்வு அளித்து மனஅழுத்தத்தில் இருந்து விடுபட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தகுதி இல்லை

அமைச்சர் ரகுபதி மீது ஏற்கனவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் குற்றச்சாட்டு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், ஊழல் தடுப்பு பிரிவு அவரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு இருக்கும்போது ஊழல் குற்றச்சாட்டு உள்ள தி.மு.க. அமைச்சர்கள் அதில் இருந்து எளிதாக விடுவிக்கப்படுகின்றனர். ஊழல் செய்த வழக்கு நிலுவையில் உள்ள அமைச்சர் ரகுபதிக்கு ஊழலை பற்றி பேச தகுதியும், அருகதையும் கிடையாது.

மகளிர் உரிமைத்தொகை குறித்து தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு பல நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மதுரையில் மாநாடு

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான அடிப்படை பணிகளை செய்து வருகிறோம். தற்போது ஒரு கோடியே 60 லட்சம் உறுப்பினர்கள் எங்களது கட்சியில் உள்ளனர். வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி மிகப்பெரிய எழுச்சி மாநாடு மதுரையில் நடத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் நாட்கள் உள்ளன.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கை காரணமாக சுமார் 20 நாட்களாக தி.மு.க. அமைச்சர்கள் பயந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு மடியில் கனம் இல்லை, எனவே, வழியில் பயம் இல்லை.

கொள்கை இல்லை

கடந்த 1999-ம் ஆண்டு பா.ஜனதாவுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. தற்போது காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளது. அவர்களுக்கு கொள்கை என்பதே இல்லை. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் காய்கனிகளின் விலை உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி சுமார் 70 சதவீதம் உயர்ந்து உள்ளது. மின்கட்டணம், வீட்டுவரி உள்ளிட்டவை உயர்வு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த வேதனைப்படுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் சரியான மருத்துவம் இல்லை. இதற்கு திறமையற்ற தி.மு.க. அரசுதான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, தூத்துக்குடிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், தளவாய்சுந்தரம், நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர்கள் செல்லபாண்டியன், கருப்பசாமி பாண்டியன், சின்னதுரை உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story