அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தொடக்கம்..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த வழக்கில் 3-வது நீதிபதி விசாரணையை தொடங்கியுள்ளார்.
சென்னை,
சட்ட விரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள், இரு வேறு தீர்ப்புகளை வழங்கினர். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் 3-வது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
இதனைதொடர்ந்து வழக்கை கடந்த சில நாட்களுக்கு முன் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். அப்போது, எந்தெந்த கருத்துக்களில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளனர் என்பது குறித்து, மேகலா தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, வழக்கில் இறுதி முடிவெடுக்க, இந்த அம்சம் குறித்து வாதம் செய்யலாம் என்ற தெரிவித்த நீதிபதி, விசாரணையை 11 மற்றும் 12ஆம் தேதிகளுக்கு தள்ளிவைத்தார்.
அதன்படி, அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி தொடர்ந்த வழக்கில் 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் வழக்கறிஞர் கபில்சிபில் காணொளி வாயிலாக ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார். காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் வழங்கியிருந்தாலும், புலன் விசாரணை அதிகாரம் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்குதான் உள்ளது எனவும் குற்றம் புரிந்தவன் மூலம் பெற்ற பணத்தை வைத்ததாகவோ, மறைந்ததாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை என மேகலா தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? சிகிச்சை பெறும் காலத்தை, நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா? கூடாதா? என்பது குறித்து இரு தரப்பும் வாதங்களை முன்வைக்க உள்ளனர்.