கலைஞர் நூலக கட்டுமான பணிகளை அமைச்சர்கள் ஆய்வு


கலைஞர் நூலக கட்டுமான பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
x

மதுரை அருகே கலைஞர் நூலக கட்டுமான பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மதுரை

அலங்காநல்லூர்

மதுரை அருகே கலைஞர் நூலக கட்டுமான பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஜல்லிக்கட்டு அரங்கம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குட்டி மேக்கிபட்டி ஊராட்சி கீழக்கரை வடக்கு பகுதியில் உள்ள வகுத்து மலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி, நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், தளபதி, பூமிநாதன் மற்றும் நெடுஞ்சாலை துறை வருவாய்த்துறை, சுற்றுலா துறை, ஊரக வளர்ச்சி அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

தமிழக மக்களின் பாரம்பரிய வீரவிளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிகட்டு விழாவை போற்றும் விதத்தில் பிரமாண்ட ஜல்லிகட்டு அரங்கம் அலங்காநல்லூரில் திறக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் ஏற்கனவே 110 விதியின் கீழ் அறிவித்து இருந்தார். அதன்படி அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் 66 ஏக்கரில் இயற்கை எழில் சூழ்ந்த இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு கட்டுமான பணிகள் நடைபெற டெண்டர் விடப்பட்டுள்ளது.

திட்ட அறிக்கை

சிட்டம்பட்டி முதல் வாடிப்பட்டி தேசிய புறவழி சாலையுடன் கலையரங்கத்தை இணைக்க சுமார் 3 கி.மீ. நிலம் கையகப்படுத்தபடும். ஜல்லிக்கட்டு கலை அரங்கம் குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய 4 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடைபெறாத நேரத்தில் பொதுமக்கள் விரும்பினால், மற்ற விளையாட்டுகள் முறையாக இந்த அரங்கத்தில் நடத்த அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலைஞர் நூலக பணி

முன்னதாக மதுரை அருகே நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலக கட்டுமான பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறு அவர்கள் உத்தரவிட்டனர்.


Next Story