எம்.எல்.ஏ. மகன், மருமகள் ஜாமீன் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண் நேரில் பதிலளிக்க உத்தரவு


எம்.எல்.ஏ. மகன், மருமகள் ஜாமீன் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண் நேரில் பதிலளிக்க உத்தரவு
x
தினத்தந்தி 15 Feb 2024 7:50 AM GMT (Updated: 15 Feb 2024 7:51 AM GMT)

ஜாமீன் வழக்கின் விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் இளம்பெண் மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.

ஆனால் அந்த பெண்ணுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்காமல் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதுடன், அவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதிவாணன், அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து தலைமறைவான அவர்களை ஆந்திராவில் கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ஜாமீன் வழக்கின் விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின்போது, தங்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது நியாயமற்றது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், இது தொடர்பாக காவல்துறை, பாதிக்கப்பட்ட பெண் பதில் அளிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story