சோளிங்கர் நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தெருக்களை விரிவாக்கம் செய்ய எம்.எல்.ஏ.வலியுறுத்தல்


சோளிங்கர் நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தெருக்களை விரிவாக்கம் செய்ய எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
x

சோளிங்கர் நகர தெருக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்ய வேண்டும் என கருத்து கேட்பு கூட்டத்தில் முனிரத்தினம் எம்.எல்.ஏ.வலியுறுத்தினார்.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கர் நகர தெருக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்ய வேண்டும் என கருத்து கேட்பு கூட்டத்தில் முனிரத்தினம் எம்.எல்.ஏ.வலியுறுத்தினார்.

கருத்து கேட்பு கூட்டம்

சோளிங்கர் பேரூராட்சியாக இருந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளில் புதிய நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டு காலமாக நகராட்சி பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வந்த நிலையில் நகராட்சி உட்கட்டமைப்பு திட்ட பணிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம் சோளிங்கர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.இதில் நகராட்சிகளின் திட்ட மண்டல இயக்குனர் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய நகரமன்ற உறுப்பினர் கோபால் சோளிங்கரில் புதிய பஸ் நிலையம் கட்ட வேண்டும் எனவும், பொதுமக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், பூங்கா, சமுதாய கூடம், விளையாட்டு மைதானம், நடை பயிற்சி மைதானம் அமைக்க வேண்டும் என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய நகராட்சி வார்டு உறுப்பினர் அன்பரசு, சோளிங்கர் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதனால் ஊருக்கு வெளியே‌ நெடுஞ்சாலை அமைக்க வேண்டும் என்றார்.

உயர்தர வசதிகள்

நகராட்சி வார்டு உறுப்பினர் ஆஞ்சநேயன்:- மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் சோளிங்கர் உள்ளது. இங்குள்ள மருத்துவ மனைக்கு ராணிப்பேட்டை, வேலூர், சித்தூர், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதனால் சோளிங்கர் அரசு மருத்துவமனையை உயர்தர சிகிச்சை மருத்துவ வசதிகள் செய்து மருத்துவ மனையை தரம் உயர்த்த வேண்டும், அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ஏற்பாடு செய்ய‌ வேண்டும்.

நகராட்சி வார்டு உறுப்பினர் கணேசன்:-

மழைக்காலத்தில் எசையனூர் தரைப்பாலத்தை வெள்ளம் முழ்கடிப்பதால் மறுகரைக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ.:-

சோளிங்கர் ஒரு தொன்மையான புண்ணியத்தலம், தற்போது ரோப்கார் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாமல் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பிற வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படும் வகையில் உணவகங்கள், ஏ.டி.எம். கோவில் குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.

அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும், சாலைகளை அகலப்படுத்த வேண்டும், ஆக்ரமிப்புகளை அகற்றி தெருக்களை விரிவாக்கம் செய்ய வேண்டும். பொதுமக்கள் பொழுது போக்குக்காக பூங்கா அமைக்க வேண்டும். குளங்களை தூர்வாரி மழைகாலங்களில் தண்ணீர் சேமிக்க வழிவகை செய்ய வேண்டும்.

நகராட்சி உறுப்பினர் அசோகன்:-

சோளிங்கர் நகராட்சியோடு புதிய பகுதிகளை இணைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், யோக நரசிம்மர் கோவில் சென்று வர இரு வழி சாலையாக அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும., நகர்ப்புற சாலைகளை அகலபடுத்த வேண்டும், பொன்னை ஆற்றில் இருந்து குடிதண்ணீர் கொண்டு வர வேண்டும். 10ஆண்டுக்கு பிறகு பெருகும் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வளர்ச்சி பணிகள் திட்டமிட வேண்டும். குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி வேண்டும், குளங்களை கணக்கெடுக்க வேண்டும்.

நிகழ்ச்சியில் சோளிங்கர் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, தாசில்தார் கணேசன், நகராட்சி ஆணையர் பரந்தாமன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல், இளநிலை உதவியாளர் எபினேசன், ஜெயராமன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

============


Next Story