மக்களை பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று ஆணவத்தோடு மோடி மக்களவையில் பேசியிருக்கிறார் - கே.எஸ். அழகிரி


மக்களை பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று ஆணவத்தோடு மோடி மக்களவையில் பேசியிருக்கிறார் - கே.எஸ். அழகிரி
x

ஒன்பதரை ஆண்டுகால ஜனநாயக விரோத, பாசிச ஆட்சிக்கு மக்களவை தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

2014-ம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி ஆட்சியில் அமர்ந்த பிரதமர் மோடி, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் ஒன்பதரை ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் சாதனைகளை கொச்சைப்படுத்துகிற வகையில் மக்களவையில் உரையாற்றி இருக்கிறார். இதற்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் ஒத்து ஊதியிருக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கூறினார்கள், பணமதிப்பு நீக்கம் செய்தால் கருப்பு பணம், கள்ளப் பணம் ஒழியும் என்று கூறினார்கள். இதனால் பொருளாதார பேரழிவு ஏற்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து, நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழக்கும் நிலை தான் ஏற்பட்டது. வரலாறு காணாத கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவ துறையில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையிலும், சொந்தமாக தடுப்பூசி தயாரிக்க முடியாத அவலநிலையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரை துறந்தார்கள்.

விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக கூட்டுவேன், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றி, விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு இருமடங்கு விலை வழங்குவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். அதை நிறைவேற்றாததற்கு பரிகாரமாக டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கியிருக்கிறார். எத்தனை விருதுகள் வழங்கினாலும் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, விவசாயிகள் போராட்டத்தினால் திரும்பப் பெற்று விவசாயிகளுக்கு எதிராக மோடி அரசு செய்த துரோகத்தை ஈடுகட்ட முடியாது.

இந்தியாவின் பொருளாதாரத்தை 2025-ம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலர், அதாவது ரூபாய் 400 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்திக் காட்டுவேன் என்று பிரதமர் மோடி உரத்தக் குரலில் உறுதிபடக் கூறினார். ஆனால், இன்றைய சூழலில் அதனை நிறைவேற்ற முடியாத நிலையில் அந்த இலக்கை 2027-ம் ஆண்டிற்கு தள்ளிப் போட்டிருக்கிறார். அந்த இலக்கை அடைய வேண்டுமானால் தற்போதைய வளர்ச்சியை விட இருமடங்கு வளர்ச்சியை அடைய வேண்டும். ஆனால், அது சாத்தியமில்லை என்பது இன்றைக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2014-ல் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.58.62 தற்போது 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 83 ஆக சரிந்துள்ளது. இதன்படி ரூபாய் மதிப்பு 40 சதவிகிதம் குறைந்துள்ளது. 2014-ல் வங்கியில் ரூபாய் 100 செலுத்தியிருந்தால் அதன் மதிப்பு இன்றைக்கு ரூபாய் 60 ஆக குறைந்துள்ளது.

பா.ஜ.க. ஆட்சியில் தவறான பொருளாதார கொள்கை காரணமாக கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 31 டிசம்பர் 2023 நிலவரப்படி ஒன்றிய பா.ஜ.க. அரசின் மொத்த கடன் ரூபாய் 172 லட்சம் கோடி. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 57 சதவிகிதம் ஆகும். 2014-க்கு முன் இந்தியாவை 67 ஆண்டுகளாக 14 பிரதமர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். அந்த 67 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த கடன் ரூபாய் 55 லட்சம் கோடி தான். ஆனால், 2014 முதல் 2023 டிசம்பர் வரை ஒன்பதரை ஆண்டுகளில் 172 லட்சம் கோடி ரூபாயாக கடன் சுமை உயர்ந்திருக்கிறது. இதன்படி கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு 117 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக கடன் வாங்கியிருக்கிறது. ஒரு நாட்டின் கடன் என்பது அந்த நாட்டு மக்களின் தலையில் தான் விழுகிறது. அந்த வகையில் பார்க்கிற போது, 2014க்கு முன் இந்திய குடிமகன் ஒருவர் மீது சராசரியாக ரூபாய் 43,000 கடன் இருந்தது. அது தற்போது ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சுமார் 3 மடங்கு ஒரு தனிநபர் மீதான கடன் அதிகரித்திருக்கிறது. பட்ஜெட் தொகையில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட மட்டுமே பயன்படுத்தப்படுவதால் மக்கள் நலத்திட்டங்களுக்கு பெரிய அளவில் பா.ஜ.க. அரசால் நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை.

பிரதமர் மோடி ஆட்சியை பொறுத்தவரை ஏழை, எளியவர்களுக்கு பயனளிப்பதை விட சில குறிப்பிட்ட தொழிலதிபர்கள் சொத்து குவிக்கவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு ஆதாரமாக சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான ஆக்ஸ்பார்ம் நிறுவனம் 2023-ல் வெளியிட்ட அறிக்கையின்படி மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினர் இந்தியாவின் சொத்து மதிப்பில் 77 சதவிகிதத்தை வைத்துள்ளனர். அதேநேரத்தில் 50 சதவிகிதத்தினர், அதாவது 67 கோடி இந்தியர்களின் சொத்து மதிப்பு ஒரு சதவிகிதம் தான் உயர்ந்துள்ளது. கடந்த 2000-ம் ஆண்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 9 ஆக இருந்தது, 2023-ல் 169 ஆக உயர்ந்தது தான் மோடி ஆட்சியின் சாதனையாகும். அதேபோல, அதானி, அம்பானியின் சொத்து பல மடங்கு குவிந்திருக்கிறது.

இதுகுறித்து போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்களின் பட்டியலின்படி கடந்த 8 ஆண்டுகளில் அதானியின் சொத்து 2,229 சதவிகிதமும், அம்பானியின் சொத்து 400 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. டிசம்பர் 2022 நிலவரப்படி அதானியின் சொத்து 8.26 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 13-வது இடத்தை பிடித்திருக்கிறார். 2014-ம் ஆண்டு 609-வது இடத்தில் இருந்தவர் இன்றைக்கு 13-வது இடத்திற்கு உயர்வதற்கு யார் காரணம் ? யார் பொறுப்பு ? சில குறிப்பிட்ட தொழிலதிபர்களின் சொத்து குவிப்பினால் பா.ஜ.க. தேர்தல் நிதியாக கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பத்திரங்களின் மூலமாக குவித்து வருகிறது. 2018 முதல் 2023 வரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை ரூபாய் 9,200 கோடி. இதில் பா.ஜ.க. பெற்ற நன்கொடை மட்டும் ரூபாய் 5,272 கோடி. இது மொத்த நன்கொடையில் 52 சதவிகிதமாகும். பெரும் தொழிலதிபர்கள் எத்தனை கோடி நன்கொடை கொடுத்தாலும் அது பா.ஜ.க.வுக்கும், நன்கொடை கொடுத்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எந்த தொழிலதிபர் எவ்வளவு நன்கொடை கொடுத்தார் என்பதை தெரிந்து கொள்ள முடியாது.

இதைவிட ஒரு ஊழல் மோசடி வேறு என்ன இருக்க முடியும் ? அதேபோல, 2024 தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. நிதி ஆதாரங்களை பெருக்கி வருகிறது. இதன்படி மார்ச் 2023 பா.ஜ.க.வின் வங்கி கணக்கில் ரூபாய் 3,596 கோடி டெபாசிட் தொகையாக வைத்திருக்கிறது. ஆனால், சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருப்பதோ ரூபாய் 162 கோடி டெபாசிட் தொகை தான். இத்தகைய சமநிலையற்ற தன்மையில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் நிதி ஆதாரங்கள் இருக்கும் போது சுதந்திரமான, சுயேட்சையான தேர்தலை எப்படி எதிர்கட்சிகளால் எதிர்கொள்ள முடியும் என்பதை தேர்தல் பத்திர வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நீதி வழங்குமா என்று தெரியவில்லை.

பிரதமர் மோடி ஆட்சியில் நடைபெறுகிற ஊழலை மறைக்க கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஊழல் நடந்ததாக ஆதாரமற்ற அவதூறுகளை மோடியும், நிர்மலா சீதாராமனும் மக்களவையில் கூறியிருக்கிறார்கள். டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் எந்த ஊழல் குற்றச்சாட்டிலாவது அன்றைய பிரதமர், நிதி மந்திரி உள்ளிட்ட எந்த மந்திரிகள் மீதாவது ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டதா ? நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்களா ? சி.ஏ.ஜி.யின் அறிக்கையை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வெற்றி பெற்ற பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்ற 2ஜி வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி. சைனி குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் பல மாதங்கள் காத்திருந்த பிறகு குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தார்.

ஆனால், இன்றைக்கு சி.ஏ.ஜி. அறிக்கையின்படி நெடுஞ்சாலைத்துறையில் ரூபாய் 7.5 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அன்றைய 2ஜி வழக்கில் சி.பி.ஐ. வழக்கு தொடர டாக்டர் மன்மோகன்சிங் அரசு பாரபட்சமில்லாமல் உத்தரவிட்டது. ஆனால், இன்றைக்கு நெடுஞ்சாலைத்துறை ஊழல் பற்றி விசாரிக்க மத்திய புலனாய்வுத்துறைக்கு உத்தமர் வேடம் போடுகிற பிரதமர் மோடி ஏன் உத்தரவிடவில்லை ? காங்கிரஸ் ஆட்சி ஊழலுக்கு துணை போகாத நிலையில் இன்றைக்கு பா.ஜ.க. ஆட்சி ஊழலுக்கு துணை போய்க் கொண்டிருப்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

கடந்த ஒன்பதரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சீரழிந்த விவசாயிகளின் வாழ்வாதாரம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, மக்களை வதைக்கும் ஜி.எஸ்.டி. என குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டதாக கூறும் பிரதமர் மோடி அவர்களே, வறுமை ஒழிப்பு குறித்து ஹின்ட்ரைஸ் பவுண்டேஷன் தயாரித்த ஆய்வறிக்கையின்படி 20 கோடி இந்தியர்களுக்கும் மேலாக நாள்தோறும் பசியோடும், வெறும் வயிற்றோடும் உறங்குகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 2023 உலக பசி குறியீட்டின்படி 125 நாடுகளில் 111-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. கடந்த ஆண்டு 107-வது இடத்தில் இருந்து இத்தகைய அவலநிலைக்கு இந்தியாவை கொண்டு சென்று சாதனை படைத்தவர் தான் பிரதமர் மோடி.

எனவே, மக்கள் விரோத ஆட்சி செய்த பிரதமர் மோடி, மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடி, 2024 தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று ஆணவத்தோடு பேசியிருக்கிறார். கடந்த ஒன்பதரை ஆண்டுகால ஜனநாயக விரோத, பாசிச ஆட்சிக்கும், பொருளாதார பேரழிவுக்கும் 2024 மக்களவை தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story