குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல இன்று முதல் அனுமதி
6 மாதங்களுக்கு பிறகு குரங்கு நீர்வீழ்ச்சிக்க செல்ல இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
6 மாதங்களுக்கு பிறகு குரங்கு நீர்வீழ்ச்சிக்க செல்ல இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குரங்கு நீர்வீழ்ச்சி
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியாறில் குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வால்பாறை வனப்பகுதிகளில் பெய்யும் மழையின் மூலம் நீர்வரத்து உள்ளது. நீர்வீழ்ச்சிக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குளிக்க வருகின்றனர். இதற்கிடையில் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து இல்லாததால் கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நுழைவு வாயில் மூடப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக கடந்த 4-ந்தேதி முதல் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக இன்று (புதன்கிழமை) முதல் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
குளிக்க அனுமதி
குரங்கு நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து குறைந்ததால் கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி முதல் மூடப்பட்டது. இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. வால்பாறை பகுதிகளில்பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இதற்கிடையில் கடந்த 2 நாட்களாக மழைப்பொழிவு குறைந்து உள்ளதால் நீர்வரத்து குறைந்து உள்ளது.
இதன் காரணமாக கடந்த 6 மாதத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் நீர்வீழ்ச்சிக்கு வரும் நீரை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதை தவிர சுற்றுலா பயணிகள் அத்துமீறி வனப்பகுதிக்குள் செல்வதை தடுக்க ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.