பாலாற்றின் குறுக்கே செவிலிமேடு மேம்பாலத்தில் பழுதாகி நிற்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதி


பாலாற்றின் குறுக்கே செவிலிமேடு மேம்பாலத்தில் பழுதாகி நிற்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதி
x

பாலாற்றின் குறுக்கே செவிலிமேடு மேம்பாலத்தில் பழுதாகி நிற்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

செங்கல்பட்டு

காஞ்சீபுரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக காஞ்சீபுரம்- வந்தவாசி சாலை விளங்குகிறது.

காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் காஞ்சீபுரம்- வந்தவாசி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் பாலாற்றின் குறுக்கே மேம்பால சாலை உள்ளது. இந்த செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தின் மீது நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.

இந்த நிலையில் செய்யாறு மாங்கால் பகுதியில் தொழிற்பேட்டைகளும் கல்குவாரிகளும் அதிகம் இருப்பதால் அதிக அளவில் கனரக லாரிகள் மேம்பாலத்தில் செல்கிறது.

மேம்பாலத்தின் மீது செல்லும் கனரக லாரிகள் மற்றும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி மேம்பாலத்தில் நின்று விடுவதால் வந்தவாசி- காஞ்சீபுரம் சாலையின் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து பாதிப்பால் பல மணி நேரம் வாகனங்கள் சாலையில் நிற்பதால் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொதுமக்களும் தொழிலாளர்களும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் வாகன ஓட்டிகளும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு அவதிக்குள்ளாகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் இருந்த நிலையில் கனரக வாகனங்கள் அந்த வழியாக சென்ற காரணத்தால் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாலாற்றில் இருந்த தரைப்பாலம் சேதமடைந்து போக்குவரத்து செல்ல முடியாத நிலைக்கு மாறிப்போய் உள்ளது.

அதனால் செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலாற்றின் குறுக்கே பழுதாகி உள்ள தரைப்பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story