ஒற்றவயல்-பாலம் வயல் இடையே குண்டும், குழியுமான சாலையில் பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்-உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஒற்ற வயல் - பாலம் வயல் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கூடலூர்
ஒற்ற வயல் - பாலம் வயல் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
குண்டும் குழியுமான சாலை
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி 3 மற்றும் 5- ம் வார்டுகளை இணைக்கும் சாலையில் பாலம்வயல், ஒற்றவயல் உள்ளது. கூடலூர் - தேவர்சோலை செல்லும் முக்கிய சாலையாகவும், பல கிராமங்களையும் இணைக்கக் கூடியதாகவும் உள்ளது. தற்போது மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் எந்த வாகனங்களும் இயக்க முடிவது இல்லை.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாலையில் உள்ள கற்கள் முழுமையாக பெயர்ந்தும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து செல்கின்றனர். மேலும் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தால் கூட நோயாளியை மெயின் ரோட்டிற்கு கொண்டு வாருங்கள். அங்கிருந்து அழைத்து செல்கிறோம் எனக் கூறி டிரைவர்கள் வருவது இல்லை.
சாலையை புதுப்பிக்க வேண்டும்
இதனால் அவசர தேவைகளுக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர். இதை தவிர்க்க ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்லும் நிலை ஏற்படுகிறது. சில சமயத்தில் வாகனங்களும் பழுதாகி நின்று விடுகிறது என கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு தேவைகளுக்காக ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் நடந்தே சென்று வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும் உரிய நேரத்தில் பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடிவதில்லை என மாணவர்கள் புலம்பி வருகின்றனர், இதனால் பழுதடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அப்பகுதி மக்கள் மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே இன்னும் 4 மாதங்களுக்குப் பிறகு மழைக்காலம் தொடங்க உள்ளதால் சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.