14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் நடைபயண பிரசாரம்

இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து வருகிற ஏப்ரல் மாதம் 5-ந் தேதி டெல்லியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற உள்ளது. இதையொட்டி முத்தூரில் நேற்று காலை நடைபயண பிரசார இயக்கம் நடைபெற்றது.
அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.20 ஆயிரம் மற்றும் மாத ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை 5 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும், சிறு-குறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பெற்றுள்ள கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி-யை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயணம் பிரசார இயக்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கட்டுமான தொழிலாளர் சங்க தொட்டியபாளையம் பொடாரன் தலைமை தாங்கினார். விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எ.சண்முகம் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் கே.திருவேங்கடசாமி, தமிழக விவசாயிகள் சங்க தாலுகா துணை தலைவர் எஸ்.தங்கவேல் ஆகியோர் விளக்க உரை ஆற்றினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் எஸ்.பழனிச்சாமி, எம்.ராதாமணி, எம்.சுப்பிரமணி, கருப்புசாமி மற்றும் தொழிற் சங்கத்தினர் கலந்து கொண்டனர். முத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நடைபயணம் முக்கிய வீதிகள் வழியாக வெள்ளகோவில் பஸ் நிலையத்தை சென்றடைந்தது. முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.மணிகண்டன் நன்றி கூறினார்.






